Published : 23 Feb 2023 07:48 AM
Last Updated : 23 Feb 2023 07:48 AM

நீலகிரி | எடக்காடு வனப்பகுதியில் புலியை கொன்று இறைச்சியை சமைத்து சாப்பிட்ட 4 பேர் கைது

உதகை: நீலகிரி மாவட்டம் எடக்காடு பகுதியில் புலியை சுருக்கு வைத்து வேட்டையாடி, இறைச்சியை சமைத்து சாப்பிட்டதாக கைதான 4 பேரிடம் வனத்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரசூர் பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த சிலர் தற்காலிக குடில்கள் அமைத்து தங்கியிருப்பதாகவும், அவர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அவர்களின் தங்குமிடத்தை வனத்துறையினர் சோதனை செய்தபோது, ஒரு பையில் புலித்தோல், புலி நகம், எலும்புகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அவற்றை பறிமுதல் செய்து, பஞ்சாப்பை சேர்ந்த ரத்னா (40), மங்கல் (28), கிருஷ்ணன் (59), ராஜஸ்தானை சேர்ந்த ராம் சந்தர் (50) ஆகிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், இக்கும்பல் நீலகிரி மாவட்டம் குந்தா வனச்சரகத்துக்கு உட்பட்ட எடக்காடு அருகே அடர்ந்த வனப்பகுதியில் சுருக்குவைத்து புலியை வேட்டையாடியதும், அதன் இறைச்சியை சமைத்து சாப்பிட்டதோடு, புலி நகங்கள், எலும்புகளை கடத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து கைதான 4 பேரிடமும் நீலகிரி மாவட்ட வனஅலுவலர் கவுதம், உதவி வனப் பாதுகாவலர் சரவணன், சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக உதவி வனப்பாதுகாவலர் சரவணன் கூறும்போது, ‘‘வட மாநிலத்தை சேர்ந்தவர்கள், உள்ளூர் மக்களுடன் சேர்ந்து இச்செயலில் ஈடுபட்டனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம். கிராமங்களில் சந் தேகப்படும்படி திரியும் வட மாநிலத்தவர் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

இதுதொடர்பாக வனஆர்வலர்கள் கூறும்போது, ‘‘வனத்துறையினருக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரிக்க வேண்டும்’’ என்றனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கைதான வேட்டைக் கும்பலுடன் வனத்துறையினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x