Last Updated : 23 Feb, 2023 06:47 AM

1  

Published : 23 Feb 2023 06:47 AM
Last Updated : 23 Feb 2023 06:47 AM

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவல்களை தடுக்க ஸ்மார்ட் தடுப்பு வேலி அமைக்கும் பணி தீவிரம்

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அமைக்கப்பட்டு வரும் ஸ்மார்ட் வேலி.

அகமதாபாத்: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவல்களை தடுக்க, துருபிடிக்காத, சேதப்படுத்த முடியாத நவீன வசதிகள் கொண்ட ஸ்மார்ட் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தியா - பாகிஸ்தான் எல்லையோரத்தில் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் உள்ளன. இதில் காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவல் அடிக்கடி நடக்கும். எல்லை பகுதிகளில் ராணுவத்தை தாண்டி எல்லை பாதுகாப்பு படையினர்தான் முன்கள வீரர்களாக இருந்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு எல்லை பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதிதான் குஜராத்தின் கட்ச் மாவட்டம் பூஜ் பகுதியை அடுத்த தர்மசாலா எல்லைப் பகுதி.

இந்த எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து, 3.2 கி.மீ. தொலைவிலேயே பாகிஸ்தான் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. ஆனால், இந்தியாவில் எல்லையில் இருந்து 60 கி.மீ.க்கு பின்னர்தான் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இதை சாதகமாக பயன்படுத்தி, எல்லைப் பகுதியில் பொதுமக்கள் மூலம் பாகிஸ்தான் ஊடுருவலை நிகழ்த்தும் என்பதால், வீரர்கள் கூடுதல் கண்காணிப்புடன் உள்ளனர். இப்பகுதியில் 2 அடுக்கு இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப் பட்டுள்ளன. இதையடுத்த 300 மீட்டர் என்பது எல்லையாக குறிக்கப்பட்டுள்ளது.

தடுப்பு வேலிக்கு முன்புறம் இந்திய பகுதியில் கண்காணிப்பு கோபுரங்கள், ரோந்து பணிகள் மூலம் எல்லை கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒரு கி.மீ. சுற்றளவில் எந்த உயிரினம் வந்தாலும் கண்காணிக்கும் தெர்மல் கேம ராக்கள், பைனாகுலர்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன் படுத்தியும் கண்காணிக்கின்றனர்.

ஸ்மார்ட் தடுப்பு வேலிகள்: இதுதவிர, எல்லை தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ள பகுதியில், மின் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.இதனால், இரவு நேரங்களிலும் எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர, தற்போது மத்திய அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் பல நவீன தொழில்நுட்பம் சார்ந்த கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது.

இத்திட்டம் கடந்த 2018-ல் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஒருங்கிணைந்த எல்லைப் பகுதி மேலாண்மை (சிஐபிஎம்எஸ்) திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் தடுப்பு வேலி என்பது அதில் முக்கியமானதாகும். குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் எல்லை 3,323 கி.மீ. வரை விரிந்துள்ளது. இதில் முதல்கட்டமாக ஜம்மு -காஷ்மீர் பகுதியிலும், அசாமிலும் 71 கி.மீ. தூரத்துக்கு சோதனை முறையில் ஸ்மார்ட் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கட்டமாக ஸ்மார்ட் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில், குஜராத் மாநிலத்தில் உள்ள 500 கி.மீ. எல்லையும் அடங்கும். குஜராத் மாநில எல்லைப் பகுதியில் முதல் கட்டமாக 13 கி.மீ. தொலைவுக்கு, குறிப்பாக தடுப்பு வேலி சேதமடைந்துள்ள பகுதிக
ளில் ஸ்மார்ட் தடுப்பு வேலி அமைக்க மத்திய அரசு நட வடிக்கை எடுத்துள்ளது.

விரல்கூட நுழைய முடியாத ஸ்மார்ட் தடுப்பு வேலியில் ஏறிகடப்பது கடினம். எந்த கால சூழலிலும் துருபிடிக்காத, எளிதில் வெட்ட இயலாத இந்த வேலியில், யாரேனும் கைவைத்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள பாதுகாப்பு படையினருக்கு சிக்னல் சென்றுவிடும். இதுதவிர, கண்காணிப்பு கேமராக்கள், லேசர் மூலம் கண்காணிப்பு என பல்வேறு வசதிகள் இந்த நவீன ஸ்மார்ட் தடுப்பு வேலியில் உள்ளன.

தடுப்பு வேலி 198.4 கி.மீ. தொலைவுக்கு புதிதாகவும், 254.9 கி.மீ. தொலைவுக்கு ஏற்கெனவே இருப்பதை மாற்றிவிட்டு புதிதாக அமைக்கவும் என மொத்தம் 453.3 கி.மீ. தொலைவுக்கு மத்திய அரசு முதல் கட்டமாக அனுமதி அளித்தது. அதில், தற்போது வரை 90.6 கி.மீ. தொலைவுக்கு பணிகள் முடிந்துள்ளன. 256.2 கிமீ தொலைவுக்கு பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x