Published : 16 Feb 2023 06:15 AM
Last Updated : 16 Feb 2023 06:15 AM

கிருஷ்ணகிரி | ராணுவ வீரர் கொலை: திமுக கவுன்சிலர் உட்பட 9 பேர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே ஏற்பட்ட மோதலில் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக திமுக கவுன்சிலர் உள்ளிட்ட 9 பேரைபோலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் வேலம்பட்டி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் மாதையன். இவரது மகன்கள் பிரபாகரன் (31). பிரபு (28). இருவரும் ராணுவ வீரர்கள்.

இந்நிலையில், கடந்த 8-ம் தேதி பிரபாகரன் அங்குள்ள பொது குடிநீர் தொட்டி அருகே துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நாகரசம்பட்டி பேரூராட்சி 1-வது வார்டு திமுக கவுன்சிலர் சின்னசாமி, பிரபாகரனை கண்டித்துள்ளார். மேலும், மாலையில் சின்னசாமி மற்றும் அவரது மகன்கள், உறவினர்களுடன் சென்று பிரபாகரனிடம் தகராறு செய்துள்ளார். இதில், இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த சின்னசாமி தரப்பினர், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் பிரபாகரன், அவரது தம்பி பிரபு, தந்தை மாதையன் ஆகியோரை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும், அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக, ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுதொடர்பாக இருதரப்பினரும் நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸார், சின்னசாமி உள்ளிட்ட 9 பேர் மற்றும் பிரபாகரன் உள்ளிட்ட 10 பேர் மீது தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

மேலும், கடந்த 9-ம் தேதி சின்னசாமி தரப்பில் அவரது மகன்கள் குரு சூர்யமூர்த்தி (27), குணாநிதி (19), ராஜபாண்டி (30) மற்றும் மணிகண்டன், மாதையன், வேடியப்பன் உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்தனர். இதில், குரு சூர்யமூர்த்தி, சென்னை மாநகர ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபு, நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதையடுத்து, இவ்வழக்கைக் கொலை வழக்காக மாற்றிய போலீஸார் தலைமறைவாக இருந்த கவுன்சிலர் சின்னசாமி, புலிபாண்டி, காளியப்பன் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x