Published : 23 Dec 2022 02:33 PM
Last Updated : 23 Dec 2022 02:33 PM

ராஜபாளையம் மயூராநாத சுவாமி கோயிலில் நிதி முறைகேடு புகார்: கணக்கர் மீது வழக்குப் பதிவு

ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயில்

ராஜபாளையம்: ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக பொறுப்புக் கணக்கராக பதவி வகித்த சாந்தி என்பவர் மீது ராஜபாளையம் வடக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்திற்கு உட்பட்ட பெத்தவநல்லூர் மாயூரநாத சுவாமி கோயில் செயல் அலுவலராக ராஜா என்பவர் இருக்கிறார். இங்கு தட்டச்சராக பணியாற்றும் சாந்தி, கணக்கர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். இந்த நிலையில், கோயிலுக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ள சந்தோஷ் குமார் என்பவர் வாடகை செலுத்திய ரசீது புத்தகத்தில் திருத்தம் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த செயல் அலுவலர் ராஜா, குத்தகைதாரர் சந்தோஷ் குமாரிடம் விசாரித்ததில் ரூ.1 லட்சம் வாடகை செலுத்தியது தெரியவந்தது. இது குறித்து செயல் அலுவலர் ராஜா உயர் அலுவலர்களுக்கு அறிக்கை ஒன்றை அளித்தார். மேலும், கோயிலில் திருவிளக்கு பூஜை உள்ளிட்ட விழாக்களில் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பது, பக்தர்கள் வழங்கும் காணிக்கைகளுக்கு உரிய ரசீது வழங்காதது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக வந்த புகார் எழுந்தது.

இதையடுத்து, கோயில் கணக்கு விபரங்களை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் செயல் அலுவலர் முத்துராஜா தணிக்கை செய்ததில் முறைகேடு நடந்தது தெரியவந்தது. இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் 6-ம் தேதி கணக்கர் (பொறுப்பு) சாந்தியை இணை ஆணையர் செல்லத்துரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், கோயில் இடத்திற்கு பெற்ற வாடகை கட்டணத்தை குறைத்து காட்டி முறைகேட்டில் ஈடுபட்டதாக கணக்கர் (பொறுப்பு) சாந்தி மீது செயல் அலுவலர் ராஜா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, ராஜபாளையம் வடக்கு போலீசார் மோசடி உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் சாந்தி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x