Last Updated : 22 Dec, 2022 06:48 PM

1  

Published : 22 Dec 2022 06:48 PM
Last Updated : 22 Dec 2022 06:48 PM

குளத்தில் மூழ்கடித்து இளம்பெண் கொலை: 5 மாதங்களுக்கு பின் துப்பு துலங்கிய போலீஸ் - தஞ்சையில் இருவர் கைது

விசாரணையில் ஈடுபடும் போலீஸார்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே காதலனால், குளத்தில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணிடன் உடல் பாகங்கள் 5 மாதங்களுக்கு பிறகு எலும்புக் கூடாக கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, அந்தப் பெண்ணின் காதலன் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து போலீஸ் தரப்பு கூறியது: ராமநாதபுரம் மாவட்டம் வாத்தியனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் உடையார் (50). விவசாய தொழிலாளி. இவரது மகள் வாசுகி (25). 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இதே பகுதியை சேர்ந்த ராமு என்பவரின் மகன் மாதவன் (25). இவருக்கும், வாசுகிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இந்த நிலையில் வாசுகி கர்ப்பம் அடைந்துள்ளார். தொடர்ந்து வாசுகி தான் கர்ப்பம் ஆனதால் குடும்பத்தினருக்கு பயந்து கொண்டு இருந்துள்ளார். நாளடைவில் அப்பா கண்டுபிடித்து விட்டால் என்ன செய்வது என்று நினைத்த வாசுகி, மாதவனை தேடிக் கொண்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

வாசுகி காணாமல் போனது குறித்து அவரது தந்தை உடையார் கீழத்தூவல் போலீஸில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், வாசுகியை காணவில்லை என்று போலீஸார் போஸ்டர் அடித்து விளம்பரமும் செய்திருந்தனர்.

இந்நிலையில், கீழத்தூவல் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் வாசுகியும், மாதவனும் காதலித்து வந்தது தெரிய வந்தது. இதனால் மாதவன் குறித்து போலீஸார் விசாரித்த போது அவர் செங்கிப்பட்டி பகுதியில் ஆட்டு கிடை போட்டு இருந்தது தெரிய வந்தது. மேலும், மாதவன் ஊருக்கு வந்திருப்பதை அறிந்த கீழத்தூவல் போலீஸார் அவரை பிடித்து தீவிர விசாரணை செய்தனர். அப்போது மாதவன் போலீஸாரிடம் வாசுகியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

மேலும், போலீஸார் விசாரணையில், செங்கிப்பட்டி பகுதிக்கு வாசுகி வந்து, மாதவனை சந்தித்து தான் கர்ப்பமாக இருப்பதாகவும், உடன் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறி வற்புறுத்தி உள்ளார். ஆனால் மாதவன் இதற்கு மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இனியும் வாசுகியை விட்டு வைத்தால் அவர் பிரச்சினை செய்வார் என்று எண்ணி தனது அண்ணன் திருக்கண்ணனுடன் சேர்ந்து செங்கிப்பட்டி டி.பி. சானிடோரியத்திலிருந்து அயோத்திப்பட்டிக்கு செல்லும் பிரிவு சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் அங்குள்ள குளம் ஒன்றில் வாசுகியை மாதவனும், திருக்கண்ணனும் சேர்ந்து நீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளனர். பின்னர் சடலத்தை அங்கேயே விட்டு விட்டு வழக்கம் போல் கிடை போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிய வந்தது.

மேலும், இன்று கைது செய்யப்பட்ட மாதவனை அழைத்து வந்த கீழத்தூவல் போலீஸார், திருவையாறு காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்மோகன், பூதலூர் காவல் ஆய்வாளர் முருகேசன், செங்கிப்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் வெற்றிவேல் மற்றும் போலீஸார் விசாரித்துவிட்டு கொலை செய்யப்பட்ட பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர்.
கொலை நடந்து ஐந்து மாதங்களுக்கும் மேல் ஆன நிலையில் குளக்கரை பகுதியில் மண்டையோடுகள், எலும்புகள் சிதறி கிடந்துள்ளது.

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதாலும் சுற்றிலும் கருவேல முள் காடுகள் இருப்பதால் நாய்கள் குளத்தின் மிதந்த சடலத்தை இழுத்து தின்று குதறி போட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் வாசுகியின் மண்டையோடு, எலும்புகள், தலைமுடி, ஆடைகள் போன்றவற்றை சேகரித்தனர். இதையடுத்து கொலைக்கு உடந்தையாக இருந்த திருக்கண்ணன்(32) என்பவரையும் செங்கிப்பட்டி போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x