Published : 22 Dec 2022 04:13 AM
Last Updated : 22 Dec 2022 04:13 AM
மதுரை: மதுரையில் கண்ணாடிக் கடை ஊழியர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மதுரை செல்லூர் அருள்தாஸ்புரத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சரவணக்குமார் (33). ஓட்டுநரான இவர், கோவையில் கண்ணாடி கடையில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் அவர் மதுரைக்கு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று பிற்பகலில் தத்தனேரி மயானப் பகுதியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வைகை வடகரை சாலைக்குச் சென்றார். அப்போது, பின்னால் வேகமாக காரில் வந்த 5 பேர் கும்பல் இருசக்கர வாகனத்தை இடித்து அவரை கீழே தள்ளி விட்டு அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியது.
தகவல் அறிந்த செல்லூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரணையில் தெரிய வந்ததாவது: சரவணக்குமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தார்.
அவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. குடும்பத் தகராறில் இருவரும் பிரிந்து விட்டனர். அவரது மனைவி பரத் என்பவரை மறுமணம் செய்துள்ளார். இந்நிலையில், தனது குழந்தையை தருமாறு கூறி சரவணக்குமார் அப்பெண்ணிடம் தொந்தரவு செய்துள்ளார். இதையடுத்து அப்பெண் ணின் தூண்டுதலின் பேரில் சரவணக்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. பரத் உள்ளிட்டோரை போலீஸார் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT