Published : 01 Dec 2022 04:08 AM
Last Updated : 01 Dec 2022 04:08 AM
திருப்பூர்: பல்லடத்தில் போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். மருத்துவமனை மற்றும் மருந்தகத்துக்கு சுகாதாரத் துறையினர் ‘சீல்’ வைத்தனர்.
பல்லடம் மாணிக்காபுரம் சாலையில், பிடிஓ காலனியில் செயல்பட்டு வந்த மருத்துவமனையில், திருப்பூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் கனகராணி தலைமையிலான மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர். அங்கு மருத்துவராக இருந்த மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ண ஆனந்த் விஸ்வாஸ் (41) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். பிளஸ் 2 மட்டுமே படித்த அவர், கடந்த 10 ஆண்டுகளாக மருத்துவமனையை நடத்தி வருவதும், மூல நோயாளிகளுக்கு ரூ. 20ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரை வசூலித்து சிகிச்சை அளித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து சுகாதாரத் துறையினர் அளித்தபுகாரின் பேரில் பல்லடம் போலீஸார் வழக்கு பதிந்து கிருஷ்ண ஆனந்த்விஸ்வாஸை கைது செய்தனர். அம்மருத்துவமனையில் தங்கியிருந்தநோயாளிகளை வெளியேற்றிவிட்டு, மருத்துவமனைக்கு சுகாதாரத் துறையினர் ‘சீல்’ வைத்தனர். அதேபோல பல்லடம் மகாலட்சுமி நகரில் செயல்பட்டு வந்த மருந்தகத்தில்,மருந்துகள் வாங்கச் செல்லும் நோயாளிகளுக்கு ஊசி செலுத்துவது உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து அங்கு சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு,பயன்படுத்தப்பட்ட சிரிஞ்சுகள் கிடந்ததையும், மருந்தகத்தை ஒட்டியே மருத்துவமனை போன்ற வளாகம் இருந்ததையும் சுகாதாரத் துறையினர் கண்டறிந்தனர். மருத்துவர்கள் இன்றி அங்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து மருந்தகம் மற்றும் மருத்துவமனை வளாகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதுதொடர்பாக அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் இன்று (டிச.1) திருப்பூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT