Published : 03 Sep 2022 06:39 AM
Last Updated : 03 Sep 2022 06:39 AM
சென்னை: செல்போன் செயலி மூலம் கடன் தந்துவிட்டு, பொதுமக்களை மிரட்டி அதிக பணம் பறித்த கும்பலைச் சேர்ந்த 4 பேரை சென்னை சைபர் க்ரைம் போலீஸார் உத்தரபிரதேசம் மற்றும் ஹரியாணா சென்று கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
அங்கீகரிக்கப்படாத கடன் செயலிகளின் மூலம் கடன் (லோன்) பெற்று திரும்ப செலுத்த தாமதமாகும்போது மக்கள் மிரட்டப்படுவதாகவும், பணம் பறிக்கப்படுவதாகவும் ஏராளமான புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்ய சென்னை சைபர் க்ரைம் துணை ஆணையர் டி.வி.கிரண் ஸ்ருதி தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீஸார் பல்வேறு கடன் செயலிகளை ஆராய்ந்தனர். பாதிக்கப்பட்டவர்களுடனான மோசடி நபர்களின் குறுந்தகவல்கள், போன் அழைப்புகளை ஆய்வு செய்தனர். மேலும், அனைத்து லோன் செயலிகளின் மிரட்டல் தொடர்பான புகார்களை ஒன்றிணைத்து ஒரு தரவு தளம் (Data Base) உருவாக்கப்பட்டது.
இதற்கென சிறப்புக் குழு அமைக்கப்பட்டு லோன் செயலிகளோடு தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட இ-மெயில் முகவரிகள், வங்கிக் கணக்குகள், 900-க்கும் அதிகமான வாட்ஸ்-அப் எண்கள் சேகரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டு தகவல்கள் திரட்டப்பட்டன.
இதன் அடிப்படையில் மோசடியில் ஈடுபட்ட கும்பல் உத்தரபிரதேசம், ஹரியாணா பகுதிகளிலிருந்து செயல்படுவது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் அந்த மாநிலங்களுக்கு சென்று லோன் செயலிகளின் கலெக் ஷன் ஏஜென்டான உத்தரபிரதேச மாநிலம், ஜங்கல் குல் ரிஹா பகுதியைச் சேர்ந்த தீபக்குமார் பாண்டேவை(26) கைது செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின்பேரில், மற்றொரு கலெக் ஷன் ஏஜென்டான ஹரியாணா, துண்டஹேரா பகுதியைச் சேர்ந்த ஜித்தேந்தர் தன்வர்(24), அவரது சகோதரியான டீம் லீடர் நிஷா(22) ஆகியோரை கைது செய்தனர்.
அதைத் தொடர்ந்து கலெக் ஷன் ஏஜென்ட்கள் மற்றும் டீம் லீடர்களை கண்காணிக்கும் டீம் மேனேஜர் தெற்கு டெல்லியைச் சேர்ந்த பிரகாஷ் சர்மா(21) என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8 செல்போன்கள், 7 லேப்டாப்கள் மற்றும் 19 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில், இந்த லோன் செயலி மோசடி கும்பலானது லோன் பெறும் பொதுமக்களை மிரட்டி லோன் பணத்தை கட்ட வைப்பதும், சில நேரங்களில் லோன் பணத்தை விட அதிகமான பணத்தை வசூலிப்பதும், 50-க்கும் மேற்பட்ட லோன் செயலிகள் மூலம் கடன் வசூலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
கடன் வசூலில் ஈடுபடும் இவர்களுக்கு ஒருவரையொருவர் யாரென்று தெரியாது. ஆன்லைனில் மட்டுமே தொடர்பில் இருந்து கொண்டு, இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள லோன் பெற்ற நபர்களிடம் வீட்டிலிருந்தபடியே கடனை வசூலிக்க மிரட்டுவது, அசிங்கமாக பேசுவது மற்றும் ஆபாச படங்களை அனுப்புவது என்று குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்கள் அங்கீகரிக்கப்படாத லோன் செயலிகளை தரவிறக்கம் செய்தால், அவர்களது செல்போனில் ஊடுருவி அதில் உள்ள புகைப்படங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், தொடர்பில் உள்ள எண்கள் மற்றும் பிற விவரங்களை திருடி வைத்துக்கொண்டு மிரட்டும் நிலை ஏற்படும். எனவே, பொதுமக்கள் அங்கீகரிக்கப்படாத லோன் செயலிகள் மூலம் கடன் எதுவும் வாங்க வேண்டாம் என்றார்.
இதேபோல் செல்போன் உரையாடல் செயலி மூலம் பழகி ரூ.56 லட்சம் பணத்தை ஏமாற்றிய பெண் உட்பட இருவரை தனிப்படை போலீஸார் கோவாவில் கைது செய்தனர். மேலும் கடன் பெற்றுத் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பி.எம்.ரெட்டி என்ற முத்துகிருஷ்ணா(44) உட்பட 4 பேர் கும்பலும் கைது செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட முத்துகிருஷ்ணா 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் ரூ.15 கோடியே 86 லட்சத்து 35 ஆயிரம் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. அவரது பினாமி பெயரில் வாங்கி வைத்திருந்த 120 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 15 அசையா சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்தார்.
மோசடி வழக்குகளில் குற்றவாளிகளை வெளி மாநிலம் சென்று கைது செய்த மத்திய குற்றப்பிரிவின் தனிப்படை போலீஸாருக்கு காவல் ஆணையர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். பின்னர், மீட்கப்பட்ட 120 பவுன் நகைகள் உட்பட மேலும் சில பொருட்களை பார்வையிட்டார். உடன் மத்திய குற்றப்பிரிவின் காவல் கூடுதல் ஆணையர் மகேஷ்வரி, துணை ஆணையர் நாகஜோதி, சைபர் க்ரைம் துணை ஆணையர் டி.வி.கிரண் ஸ்ருதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT