Published : 21 Aug 2022 05:41 AM
Last Updated : 21 Aug 2022 05:41 AM

மகாராஷ்டிராவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக வழக்கு - தருமபுரியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட் கைது

சீனிவாச முல்லாகவுடு

அரூர்: மகாராஷ்டிராவில் இயங்கி வரும் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தருமபுரியில் கைது செய்யப்பட்டார்.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர் தருமபுரி மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக அம்மாநில போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மகாராஷ்டிராவிலிருந்து சிறப்பு போலீஸ் குழுவினர் நேற்று முன்தினம் இரவு தருமபுரி வந்தனர்.

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வனை நள்ளிரவில் சந்தித்த குழுவினர் மாவோயிஸ்ட் இளைஞரைப் பிடிக்க உதவி கோரினர். இதையடுத்து எஸ்.பி. உத்தரவின்பேரில், தருமபுரி மாவட்டம் ஏ.பள்ளிப்பட்டி போலீஸார் மகாராஷ்டிரா போலீஸாருக்கு உதவினர்.

செல்போன் டவர் சிக்னல் மூலம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பாப்பம்பாடியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த செட்டே (எ) சீனிவாச முல்லாகவுடு(23) என்பவரை போலீஸார் பிடித்து கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள பாப்பம்பாடியைச் சேர்ந்த அஞ்சலி (20) என்பவர் பெற்றோருடன் மகாராஷ்டிராவில் கூலி வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அஞ்சலிக்கும், களிரோலி மாவட்டம் தாமராஜா அடுத்த பங்காரப்பேட்டையைச் சேர்ந்த முல்லா மகன் செட்டே (எ) சீனிவாச முல்லாகவுடு என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. 2 குழந்தைகள் உள்ளனர். பின்னர் அஞ்சலி குடும்பத்தினர் தமிழகம் திரும்பியுள்ளனர்.

திருப்பூரில் குடும்பத்துடன் தங்கியிருந்து கட்டிட மேஸ்திரியாக சீனிவாச முல்லாகவுடு வேலைக்கு சென்று வந்துள்ளார். பாப்பம்பாடியில் கோயில் திருவிழாவுக்கு அஞ்சலியின் உறவினர் அழைத்ததன்பேரில் கணவர் குழந்தைகளுடன் இங்கு வந்துள்ளார். அப்போது சீனிவாச முல்லாகவுடுவை போலீஸார் கைது செய்தனர்.

மகாராஷ்டிராவில் சீனிவாச முல்லாகவுடு இருந்தபோது மாவோயிஸ்ட் இயக்கத்தில் இருந்துள்ளார். அப்போது, இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டது, மாவோயிஸ்ட்களுக்கு வெடிமருந்து விநியோகம் செய்தது, தீவிரவாத செயல்களில் ஈடுபட்டது என (34, 120B, 13, 16, 18, 20, 23, 29, 39, (B) VAPA Act, 6, 9(B) India Explosive) 11 பிரிவுகளில் தாமராஜா காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் இவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அவரை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். அவரது செல்போன் உரையாடலை மகாராஷ்டிரா போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு மேலாக செல்போன் இருப்பிடம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பாப்பம்பாடியை காட்டியதின் பேரில் தருமபுரி போலீஸாருடன் இணைந்து சீனிவாச முல்லாகவுடை கைது செய்தனர்.

ஏ.பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், உளவுப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மகாராஷ்டிராவுக்கு அவரைபோலீஸார் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அவரது உறவினர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x