Published : 11 Aug 2022 09:15 AM
Last Updated : 11 Aug 2022 09:15 AM

பல நூறு கோடி முதலீடு பெற்று ஏமாற்றும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை பாயுமா? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு

வேலூர் மாவட்டம் காட்பாடியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனம் தமிழகத்தில் இதுவரை நடக்காத அளவுக்கு பல ஆயிரம் கோடி மோசடி செய்துள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதன் விளைவாக, காட்பாடி அடுத்த சேவூரைச் சேர்ந்த நிதி நிறுவன ஏஜென்ட் வினோத்குமார் (28) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

ரூ.1 லட்சம் கொடுத்தால் மாதம் தோறும் ரூ. 8,000 வரை வட்டி கிடைக்கும் என்ற ஆசை வார்த்தைக் கூறி பணம் வசூலித்து பல ஆயிரம் கோடிகளை மோசடி நிதி நிறுவனத்தினர் குவித்துள்ளனர். இந்நிறுவனத்தில் தொழில் அதிபர்கள், அரசு ஊழியர்கள், உயர் அதிகாரிகள் வரை முதலீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த 5 ஆண்டுகளாக பல பெயர்களில் நிதி நிறுவனம் நடந்து வந்தாலும், 2020-ம் ஆண்டில் தான் வேகமெடுக்கத் தொடங்கியது. பங்குச் சந்தையில் பணம் போட்டு பெரும் லாபம் சம்பாதித்துத் தருகிறோம் என்கிற பொய்யை சொல்லி பணம் வாங்க ஆரம்பித்தது. இதன்மூலம் கொள்ளை லாபம் சம்பாதித்தனர்.

அதன் பிறகு, கரோனா தொற்று வந்த ஒரு ஆண்டு காலத்தில் நிதி நிறுவனம் சாதாரண மக்களிடம் இருந்து தான் பணம் வாங்க தொடங்கியது. பிறகு, இந்த நிறுவனம் படு சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்தது. வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சென்னை, அரக்கோணம், நெமிலி, ஆற்காடு உள்பட 21 இடங்களில் இந்த நிதி நிறுவனம் அதன் கிளையை விரிவுப்படுத்தியது.

இதில் ஆயிரக்கணக்கான ஏஜென்ட்டுகள் நியமிக்கப்பட்டனர். அதற்கு பிறகு, இந்த நிறுவனத் தில் பல ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்துள்ளனர். இந்த நிதி நிறுவனத்தில் 21 இடங்களில் தமிழக பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 247 ஆவணங்கள், 56 மடிக்கணினிகள், 16 கம்ப் யூட்டர்கள், 15 செல்போன்கள், 40 சவரன் தங்க நகைகள், ஒரு கார் மற்றும் ரூ1.05 கோடி ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிறுவனத்தில் 79 ஆயிரம் பேர் சுமார் 4,383 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பது காவல் துறை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், ரூ.6,000 கோடிக்கு மேல் இந்நிறுவனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இன்னும் புகார் அளிக்காமல் இருந்தால், eow-insifscase@gmail.com என்ற ‘ஆன்லைன்’ முகவரிக்கு தங்களது புகார்களை அனுப்புமாறு பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த நிதி நிறுவனத்தின் ஏஜென்ட்டுகள் குறித்த விவரங்களை பொருளா தார குற்றப்பிரிவு காவல் துறையினர் தனித்தனியாக சேகரித்து வருகின்றனர். அவர்களிடம் எவ்வளவு பணம் பெறப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணம் திரும்ப கிடைக்குமா?

நிதி நிறுவனத்தில் பணத்தை செலுத்திய பொதுமக்கள், அரசியல் வாதிகள், காவல் துறையினர் என அனைத்து தரப்பினரும் பணம் திரும்ப கிடைக்குமா? என்ற அச்சத்துடன் உள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க நிதி நிறுவனத்தின் நிர்வாகிகள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டதாகவும் தற்போது தகவல் பரவி வருகிறது. இந்த மெகா மோசடியில் நடந்த பல விஷயங்கள் இனிமேல்தான் வெளிச்சத்துக்கு வரப்போகிறது.

மற்றொரு நிறுவனம்

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து இந்தியாவையே அதிர வைத்த சாரதா சிட் ஃபண்ட் திட்டம் போல மிகப் பெரிய மோசடியாக இருக்கும் எனக்கூறப்படுகிறது.

இதேபோல, தங்க நகையில் முதலீடு என்ற பெயரில் மற்றொரு நிதி நிறுவனமும் தமிழகத்தில் கோடிக் கணக்கான ரூபாய்களை பொதுமக்களிடம் இருந்து வசூலித்து மோசடி செய்தது தற்போது காவல் துறை விசாரணை வளையத்துக்குள் சிக்கியுள்ளது தெரிய வந்துள்ளது.

எது எப்படி இருந்தாலும் பொதுமக்கள் பல ஆண்டுகளாக உழைத்து சேர்த்த பணத்தை இப்படிப்பட்ட மோசடி நபர்களிடம் செலுத்தி தொடர்ச்சியாக ஏமாந்து வருவது தொடர் கதையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து இந்தியாவையே அதிர வைத்த சாரதா சிட் ஃபண்ட் திட்டம் போல மிகப் பெரிய மோசடியாக இருக்கும் எனக்கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x