Published : 03 Aug 2022 08:43 PM
Last Updated : 03 Aug 2022 08:43 PM
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி ஜெயராமன் தாக்கியதாகக் கூறி ரத்த காயங்களுடன் பாதுகாப்பு படையிலுள்ள தலைமைக் காவலர் புதன்கிழமை போலீஸில் புகார் செய்துள்ளார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பாதுகாப்பு படையில் ஐஆர்பிஎன் ஏட்டு செந்தில்குமார் பணிபுரிகிறார். இவர் இன்று ரத்த காயங்களுடன் பெரியக்கடை காவல் நிலையம் வந்து முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி ஜெயராமன் மீது புகார் தந்தார்.
இது தொடர்பாக ஐஆர்பிஎன் ஏட்டு செந்தில்குமார் கூறியது: "முதல்வர் ரங்கசாமி இல்லத்தில் இருந்து புறப்பட்டு சட்டப்பேரவைக்கு வந்தார். அவருடன் பாதுகாப்பு படையினரும் வந்தோம். முதல்வர் தனது அறைக்கு சென்ற பிறகு சட்டப் பேரவையிலுள்ள பாதுகாப்பு அறையில் பாதுகாப்பு படையினர் இருந்தோம். அப்போது அங்கு வந்த முதல்வரின் பாதுகாப்பு அதிகாரியான ஆய்வாளர் ஜெயகுமார் என்னை திட்டி, முகத்தில் தாக்கினார். இதனால் ரத்தக் காயம் ஏற்பட்டது.
எனது போலீஸ் சீருடையில் ரத்தம் சிந்திய நிலையில் அரசு பொது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்தேன். உடனடியாக வந்து போலீஸ் நிலையத்தில் ஆய்வாளர் ஜெயராமன் மீது புகார் தந்துள்ளேன். அவர் தாக்கியதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை" என்று குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக விசாரித்து வருகிறோம் என்று பெரியக்கடை போலீஸார் தெரிவித்தனர்.
ஏற்கெனவே முதல்வரை கோயில் திருவிழாவில் தள்ளி விட்டதாக உள்துறை அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி மீது கடும் கண்டனம் எழுந்து அவர் மாற்றப்பட்டார். தற்போது முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி மீதே புகார் எழுந்து இருப்பது காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT