Last Updated : 30 Jul, 2022 07:35 PM

 

Published : 30 Jul 2022 07:35 PM
Last Updated : 30 Jul 2022 07:35 PM

புதுச்சேரியில் பெயின்டர் வெட்டிக் கொலை: 7 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை

புதுச்சேரி: புதுச்சேரியில் கொடுக்கல் வாங்கல் தகராறில் பெயின்டர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 7 பேர் கொண்ட கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி ஜீவானந்தபுரம் பாரதிதாசன் வீதியைச் சேர்ந்த அந்தோணிராஜ் மகன் சாலமன் (24). பெயின்டர். கடந்த ஏப்ரல் மாதம் திருச்சியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், இன்று தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த 7 பேர் கொண்ட கும்பல் சாலமனை கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியது. அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடிய நிலையில், விடாமல் துரத்தியச் சென்ற அக்கும்பல், ஜீவானந்தபுரம் அன்னை பிரிதியதர்ஷினி வீதியில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது.

இது குறித்து தகவலறிந்த சீனியர் எஸ்பி தீபிகா, எஸ்பி பக்தவச்சலம், டிநகர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

பின்னர் இது குறித்து டிநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், சாலமனுக்கும், நாவற்குளம் பகுதியைச் சேர்ந்த ரகு என்பவருக்கும் இடையே, சாலமனின் நண்பர் ஒருவருக்கு பணம் கொடுத்தது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.

பிரச்சினை அதிகரித்த நிலையில், ஆத்திரமடைந்த ரகு தரப்பினர் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது என போலீஸார் தரப்பில் தெரிவித்தனர். தொடர்ந்து ரகு உள்ளிட்ட கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x