Published : 28 Jun 2022 06:04 AM
Last Updated : 28 Jun 2022 06:04 AM
திருவண்ணாமலை: தி.மலை மாவட்டம் வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தில் வசித்தவர் விஜய்(21). மளிகை கடை நடத்தி வந்துள்ளார். கடைக்கு கடந்த 12-ம் தேதி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், சு.நாவல்பாக்கம் கூட்டுச்சாலை பகுதியில் விஜய் கொலை செய்யப்பட்டு உடல் எரிக்கப்பட்டது தெரியவந்தது. விஜயை செல்போனில் தொடர்பு கொண்ட ராமசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த மொய்தீன் (35), நல்லூரைச் சேர்ந்த நாராயணசாமி (32), வரதன் (41) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து தெள்ளார் காவல் துறையினர் விசாரித்தனர்.
இதில், அவர்கள் மூவரும் விஜயை கொலை செய்து எரித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மூவரையும் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்து காவல்துறையினர் கூறும்போது, “விஜய்யின் மளிகை கடையில் பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வரதன் கொடுத்த தகவலின் பேரில் விஜய்யின் தந்தை ஏழுமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் விஜய் மற்றும் வரதன், நாராயணசாமி (2 பேரும் உறவினர்கள்) ஆகியோர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
மேலும், சரக்கு வாகனத்தில் காய்கறி வியாபாரம் செய்து வந்த மொய்தீனுக்கு கடந்த 2 மாதங்களுக்கு கொடுத்த ரூ.1 லட்சம் கடனை விஜய் திருப்பி கேட்டுள்ளார். அதில், 40 ஆயிரம் ரூபாய் கொடுத்த மொய்தீன், மீதி பணத்தை கொடுக்கவில்லை. இதனால், இருவருக்கும் விரோதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து வரதன், நாராயணசாமி, மொய்தீன் ஆகியோர் விஜயை வரவழைத்து மது கொடுத்து கயிற்றால் கழுத்தை இறுக்கியும், கத்தியால் அறுத்தும் திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். மேலும், தயாராக வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி எரித்துள்ளனர்” என்றனர். 3 பேரிடம் இருந்து கத்தி, கம்பி, செல்போன் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT