Published : 02 Jun 2022 06:40 AM
Last Updated : 02 Jun 2022 06:40 AM
திருப்பூர்: திருப்பூர் அருகே உள்ள சேடர்பாளையம் மெட்டுவாதோட்டத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் பூமாரி (35). கணவரை பிரிந்த நிலையில், தனது மகன்கள் தர்னிஷ் (9), நித்திஷ் (4) மற்றும் தனது ஆண் நண்பருடன் வசித்து வந்தார்.
கடந்த 22-ம் தேதி பூமாரியும், அவரது இரு மகன்களும் வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். இதுதொடர்பாக திருமுருகன் பூண்டி போலீஸார் வழக்குபதிந்து விசாரித்து வந்தனர். அதில் பூமாரியுடன் தங்கியிருந்தது குஜராத் மாநிலம் போர்பந்தரை சேர்ந்த கோபால் என்ற கார்த்தி (50) என்பதும், இவர், தாய் மற்றும் மகன்களை கொலை செய்ததும் தெரியவந்தது.
கோபாலை போலீஸார் தேடி வந்த நிலையில் நேற்று காலை காங்கயம் படியூர் அருகே நல்லிபாளையத்தில் உள்ள துளசி தோட்டத்தில் தண்ணீர் இல்லாத கிணற்றில் ஆண் சடலமும், அதனருகே சைக்கிளும் கிடப்பதாக காங்கயம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றினர். விசாரணையில், அந்நபர் கோபால் என்பது தெரியவந்தது.போலீஸார் தேடுவதை அறிந்த கோபால், பயத்தில் விஷம் குடித்துதற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதுதொடர்பாக திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:
கடந்த 22-ம் தேதி இரவு ஏற்பட்ட பிரச்சினையில் மூவரையும் கொலை செய்த கோபால், அங்கிருந்து மிதிவண்டியில்தப்பிச்சென்றுள்ளார். படியூரில் 2 இடங்களில் உள்ள சிசிடிவி கேமராவில் அவரது உருவம் பதிவாகி இருந்தது.
போலீஸார் தேடுவதை அறிந்து, ஒருவாரத்துக்கு முன்பேதற்கொலை செய்து கொண்டிருக்கலாம். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கடந்த 2013-ம் ஆண்டு திருமணமான பெண்ணை கோபால் கொலை செய்த வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்தவர். அதன்பின்னர் 2020-ம் ஆண்டு சிறையில் இருந்து வெளியே வந்த கோபால், திருப்பூரில் வசித்து வந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT