Published : 02 Jun 2022 06:06 AM
Last Updated : 02 Jun 2022 06:06 AM

வந்தவாசி அருகே துணிகரம்: எஸ்.ஐ., மனைவியிடம் 12 பவுன் நகை பறிப்பு

வந்தவாசி: வந்தவாசியில் நடந்து சென்ற உதவி காவல் ஆய்வாளரின் மனைவியிடம் தங்கச்சங்கிலியை பறித்ததுடன் மூர்க்கத்தனமாக காதில் இருந்த கம்மல்களையும் பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கீழ்புதுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர், சென்னை மடிப்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அனுசுயா (45) என்பவர் உறவினர் இல்ல திருமண நிகழ்வுக்காக நேற்று முன்தினம் இரவு வந்தவாசி வந்துள்ளார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு இரவு 10 மணியளவில் வந்தவாசி-ஆரணி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் அனுசுயாவின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை பறித்தனர்.

இதில், நிலை தடுமாறி விழுந்த அனுசுயாவின் காதில் இருந்த கம்மல்களையும் மூர்க்கத்தனமாக பறித்தனர். வலியால் துடித்த அவரது அலறல் சத்தத்தை கண்டுகொள்ளாத மர்ம நபர்கள் 12 பவுன் எடையுள்ள தங்கச்சங்கிலி மற்றும் கம்மல்களை பறித்துக்கொண்டு தப்பினர். காதில் ரத்தம் சொட்ட சொட்ட மயங்கிய அனுசுயாவை அவ் வழியாகச் சென்ற சிலர் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பான புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மர்ம நபர்கள் சென்ற வழியில் ஏதாவது கண்காணிப்பு கேமரா காட்சிகளில் பதிவாகியுள்ளதா? என்றும் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x