Published : 22 May 2022 09:02 AM
Last Updated : 22 May 2022 09:02 AM
புதுடெல்லி: லட்சத்தீவு கடல் பகுதியில் 2 படகுகளில் கடத்திவரப்பட்ட 218 கிலோ ஹெராயினை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் மற்றும் கடலோர காவல்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
லட்சத்தீவு கடல் பகுதியில் படகு மூலம் ஹெராயின் கடத்தல் தொழில் நடைபெறுவதாக மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இத்துறை அதிகாரிகள், கடலோர காவல் படையுடன் இணைந்து ‘ஆப்ரேஷன் கோஜ்பீன்’ என்ற பெயரில் நடவடிக்கையை கடந்த 7-ம் தேதி முதல் தொடங்கினர். கடந்த 18-ம் தேதி அன்று லட்சத்தீவு கடல் பகுதியில், 2 படகுகள் இடைமறித்து சோதனை செய்யப்பட்டன.
அந்த படகுகளில், 218 கிலோ எடையில் முதல் தர ஹெராயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், மேல் விசாரணைக்காக படகுகளையும், அதில் இருந்தவர்களையும் கொச்சி அழைத்து வந்தனர். ஆழ்கடல் பகுதியில் இந்த ஹெராயின் போதைப் பொருட்களை பெற்றதாக, படகில் வந்தவர்கள் தெரிவித்தனர். இந்த ஹெராயினின் மதிப்பு, சர்வதேச சந்தையில் ரூ.1,526 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாக பறிமுதல் செய்யப்பட்டு வரும் போதைப் பொருட்களில், இது நான்காவது பெரிய பறிமுதல் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் கண்ட்லா துறைமுகத்தில், இறக்குமதி செய்யப்பட்ட ஜிப்சம் கன்டெய்னர்களில், 205.6 கிலோ ஹெராயின் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி பறிமுதல் செய்யப்பட்டது.
குஜராத் பிபாவாவ் துறைமுகத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி ஹெராயின் பூசப்பட்ட 396 கிலோ நூல் பறிமுதல் செய்யப்பட்டது. டெல்லி விமான நிலையத்தில் கடந்த 10-ம் தேதி, 62 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. நாடு முழுவதும் கடந்த மாதம் 20-ம் தேதி முதல் 4 இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயினின் மொத்த மதிப்பு ரூ.2,500 கோடி என நிதியமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT