Published : 04 May 2022 06:31 AM
Last Updated : 04 May 2022 06:31 AM
மதுரை: மதுரையில் வாகனச் சோதனையின் போது நிற்காமல் சென்றதால், போலீஸார் லத்தியை வீசியதில் இளைஞர் உயிரிழந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் விவேகானந்தகுமார் (35). இவர் சிம்மக்கல் பகுதியில் டயர் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். 2019-ம் ஆண்டு ஜூனில் இரவு 11 மணியளவில் கடையை அடைத்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். சிம்மக்கல் வைகை பாலத்தில் சென்றபோது திலகர்திடல் போலீஸார் சோதனைக்காக மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றனர். அப்போது காவலர் ஒருவர் லத்தியை வீசியுள்ளார். இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த விவேகானந்தகுமார் சாலையில் கீழே விழுந்து காயமடைந்து உயிரிழந்தார்.
இது தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவும், ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும், கல்வித் தகுதிக்கு ஏற்ற அரசு வேலை வழங்கவும் கோரி, விவேகானந்தகுமாரின் மனைவி கஜபிரியா, உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. மதுரை காவல் உதவி ஆணையர் ஆனந்த், சிபிசிஐடி துணை ஆணையர் ஜஸ்டின் பிரபாகர் ஆகியோர் ஆஜராகினர்.
அரசு தரப்பில், மனுதாரரின் கணவர் மரணம் தொடர்பாக தலைமைக் காவலர் ரமேஷ்பாபு மீது இபிகோ 304 பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கை மதுரை நகர் போக்குவரத்து துணை ஆணையர் எஸ்.ஆறுமுகசாமி விசாரித்து வருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து. தலைமைக் காவலர் ரமேஷ்பாபு மீதான வழக்கை துணை ஆணையர் ஆறுமுகசாமி விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையில் ரமேஷ்பாபு மீது தவறு இருப்பது தெரியவந்தால் வழக்கை குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 299-க்கு மாற்றி இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த நடைமுறையை 4 வாரத்தில் மேற்கொள்ள வேண்டும். விசாரணை ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படு கிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT