Published : 13 Apr 2022 05:49 AM
Last Updated : 13 Apr 2022 05:49 AM
சென்னை: வட மாநிலங்களிலிருந்து போதை மாத்திரைகளை கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்ததாக ஆந்திர மருந்தக உரிமையாளர் உட்பட 4 பேரை புது வண்ணாரப்பேட்டை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, புது வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், நேற்று முன்தினம் புது வண்ணாரப்பேட்டை, அன்னை இந்திரா நகர், ரயில்வே கேட் அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் பெருமளவு போதை மாத்திரைகள் இருந்தன.
இதையடுத்து முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த பாண்டுரங்கன், அவரது கூட்டாளிகள் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த மருந்தக உரிமையாளர் கோபிநாத் சிங், கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகர் சந்தோஷ்குமார், முகப்பேர் பாலசுப்பிரமணியன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகள், போதைக்கு பயன்படுத்தும் வலி நிவாரணி மாத்திரைகள் உட்பட 5 வகையான 1,035 போதை மாத்திரைகள், 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட கும்பல் வட மாநிலங்களில் இருந்து போதை மாத்திரைகளை, சென்னைக்கு கடத்தி வந்து இளைஞர்களை குறிவைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT