Published : 11 Apr 2022 06:30 AM
Last Updated : 11 Apr 2022 06:30 AM

செல்போன் எஸ்.எம்.எஸ் பரிமாற்றம் மூலம் ஓசூர் தனியார் ஊழியர்களிடம் ரூ.10.43 லட்சம் மோசடி

கிருஷ்ணகிரி: செல்போன் குறுந்தகவல் பரிமாற்றம் மூலம் ஓசூரில் தனியார் நிறுவன ஊழியர்கள் இருவரிடம் ரூ.10.43 லட்சம் மோசடியில் ஈடுபட்டவர்களை சைபர் கிரைம் பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர்.

ஓசூர் வட்டம் ஈச்சங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ் (26). இவர் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அண்மையில் இவரது செல்போனுக்கு வந்த குறுந்தகவலில், ‘ஒரு சதவீதம் வட்டியில் வீட்டுக்கடன் வழங்குவதாக’ கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, சிவராஜ் அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு கடன் பெறுவது தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார்.

எதிர்முனையில் பேசியவர் ‘தனது பெயர் காவ்யா என அறிமுகம் செய்து கொண்டதோடு, கடன் பெற்று தருவதாக கூறியுள்ளார். மேலும், கடன் பெற அதற்கான நடைமுறை செலவுகள், காப்பீடு உள்ளிட்டவை முன்கூட்டியே கட்ட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

இதை நம்பிய சிவராஜ், அப்பெண் கூறிய 3 வங்கிக் கணக்குகளில் ரூ.6 லட்சத்து 97 ஆயிரத்து 38 அனுப்பியுள்ளார். ஆனால், அப்பெண் கடனை பெற்றுத் தரவில்லை. இதுதொடர்பாக சிவராஜ், அப்பெண்ணின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, அவரது அழைப்பு ஏற்கப்படவில்லை.

இதனால், சந்தேகமடைந்த சிவராஜ், கிருஷ்ணகிரி சைபர் கிரைம் பிரிவு போலீஸாரிடம் புகார் செய்தார். புகாரில், வீட்டுக்கடன் பெற்றுத் தருவதாகக் கூறி காவ்யா மற்றும் பிரபாகரன் என்பவர்கள் மோசடி செய்துவிட்டதாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

ரூ.3.46 லட்சம் மோசடி

ஓசூர் பாகலூர் சாலை திருப்பதி மெஜஸ்டிக் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (46). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு அண்மையில் குறுந்தகவல் வந்துள்ளது. அதில், ‘தங்களின் வங்கிக் கணக்கில் சில தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைநம்பிய மணிகண்டன் அதில் குறிப்பிட்டிருந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

எதிர் முனையில் பேசியவர் தன்னை வங்கி அதிகாரி என கூறியதோடு, வங்கி தொடர்பான தகவல்களை கேட்டும், சில செயலிகளை அவரது செல்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இதை நம்பிய மணிகண்டன் அவர் கூறிய நடைமுறைகளை பின்பற்றிய நிலையில்,சிறிது நேரத்தில் மணிகண்டனின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.3 லட்சத்து 46 ஆயிரம் எடுக்கப்பட்டிருப்பது தெரிந்தது.

உடனடியாக செல்போனில் பேசிய எண்ணை தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த, மணிகண்டன் இதுதொடர்பாக கிருஷ்ணகிரி சைபர் கிரைம் பிரிவு போலீஸில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x