Published : 26 Dec 2021 08:20 AM
Last Updated : 26 Dec 2021 08:20 AM

சென்னையில் நடப்பாண்டில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 403 பேர் கைது

சென்னை: பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக, சென்னையில் நடப்பாண்டு 403 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து, கைது செய்யவும், தொடர்ந்து குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, குற்றவாளிகளின் தொடர் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பொதுஅமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்துவோர், கொலை, கொலை முயற்சியில் ஈடுபடுவோர், திருட்டு, சங்கிலி பறிப்பு, சைபர் க்ரைம் குற்றங்களில் ஈடுபடுவோர், போதைப் பொருட்கள் கடத்துவோர், கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு, மிரட்டி பணம் பறிப்போர், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவுப் பொருட்கள் கடத்தல், பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் உள்ளிட்டோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

அதன்படி, நடப்பாண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் கடந்த 24-ம் தேதி வரை சென்னை பெருநகரில் கொலை, கொலை முயற்சி, பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 247 பேர், திருட்டு, சங்கிலிப் பறிப்பு, வழிப்பறி மற்றும் பண மோசடிக் குற்றங்களில் ஈடுபட்ட 96 பேர், சைபர் குற்றம் சார்ந்த வழக்குகளில் ஈடுபட்ட 19 பேர், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தி, விற்பனை செய்த 29 பேர், உணவுப் பொருட்கள் கடத்தல் வழக்கில் 6 பேர் என மொத்தம் 403 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x