Published : 31 Dec 2019 01:07 PM
Last Updated : 31 Dec 2019 01:07 PM

சென்னை அண்ணா நகர்  கொள்ளையை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம்: கொள்ளையன் முருகன் வாக்குமூலத்தை அடுத்து இன்ஸ்பெக்டர், தலைமைக் காவலருக்கு சம்மன்

சென்னை அண்ணா நகர் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைமைக் காவலர் ஜோசப் ஆகியோருக்கு ரூ.20 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக முருகன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இருவருக்கும் சமயபுரம் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

திருச்சி சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் கொள்ளை நடந்தது. அதில் ஈடுபட்ட நபர்களை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் திருச்சி லலிதா ஜுவல்லரியில் சுவரைத் துளையிட்டு பெரிய அளவிலான கொள்ளை நடந்தது. தமிழகத்தை உலுக்கிய இந்தக் கொள்ளையில் திருவாரூரில் வாகனச் சோதனையில் மணிகண்டன் என்பவர் சிக்கினார். உடன் வந்த சீராத்தோப்பு சுரேஷ் தப்பி ஓடினார்.

அவர்களிடம் திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகள் சிக்கின. தப்பி ஓடிய சுரேஷ் திருவாரூர் முருகனின் உறவினர். கொள்ளையைத் திட்டமிட்டு நடத்தியது திருவாரூர் முருகன் எனத் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் தேடிவந்த நிலையில் திருவாரூர் முருகன் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

சுரேஷ் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இருவரையும் திருச்சி போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. இதற்கிடையே கடந்த 2017-ம் ஆண்டு சென்னை அண்ணா நகர், திருமங்கலம், அமைந்தகரை உள்ளிட்ட இடங்களில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளையடித்த 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அதில் மணிகண்டன், காளிதாஸ், தினகரன் உள்ளிட்ட திருவாரூர் முருகன் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். ஆனால், திருவாரூர் முருகன் சிக்கவில்லை. கொள்ளையர்களின் மூளையாகச் செயல்பட்ட முருகன், சுரேஷை சென்னை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தன்னைக் கைது செய்யாமல் இருக்க ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலருக்கு பெரும் தொகையை முருகன் லஞ்சமாக அளித்ததாக தன் வாக்குமூலத்தில் தெரிவித்தது சமயபுரம் போலீஸாரைத் திடுக்கிட வைத்துள்ளது.

அண்ணா நகர் கொள்ளைக்குப் பின் தலைமறைவாக இருந்த முருகன் ஓராண்டு கழித்து சமயபுரம் பஞ்சாப் வங்கியில் பெரிய கொள்ளைச் சம்பவத்தை நடத்தினார். அந்த நேரத்தில் சென்னை அண்ணா நகர் போலீஸார் தன்னைக் கண்டுபிடித்து நெருங்குவதை முருகன் அறிந்தார். இந்த சூழலில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த பணத்தில் சென்னை அண்ணா நகர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைமைக் காவலர் ஜோசப் உள்ளிட்டோருக்கு ரூ.20 லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக சமயபுரம் போலீஸாரிடம் முருகன் வாக்குமூலம் அளித்தார் என்று போலீஸ் வட்டாரத்தில் கூறப்பட்டது.

இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைமைக் காவலர் ஜோசப் ஆகியோர் விசாரணையில் ஆஜராகுமாறு சமயபுரம் காவல் நிலைய போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வரும் 3-ம் தேதிக்குள் அவர்கள் ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரிடமும் நடத்தப்படும் விசாரணையின் முடிவிலேயே முருகன் சொன்னது உண்மையா அல்லது போலீஸார் மீது வீண் அவதூறை முருகன் பரப்பிவிட்டு திசை திருப்புகிறாரா எனத் தெரியும்.

மேலும், திருவாரூர் போலீஸாருக்கும் முருகன் லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. போலீஸாருக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x