செய்திப்பிரிவு

Published : 11 Sep 2019 16:54 pm

Updated : : 11 Sep 2019 17:15 pm

 

கணவன் இறந்த விரக்தியில் 5 வயது மகளுடன் ஏரியில் குதித்து தாய் தற்கொலை: உதகையில் சோகம்

mother-suicide-with-daughter-in-ooty
பிரதிநிதித்துவப் படம்

உதகை

உதகையில் கணவன் இறந்த விரக்தியில் தாய் தனது மகளுடன் ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியது.

நீலகிரி மாவட்டம் உதகை ஏரியில் இன்று (செப்.11) மதியம் இரண்டு உடல்கள் மிதப்பதாக உதகை ஜி1 காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் நீரில் மிதந்து கொண்டிருந்த தாய் மற்றும் மகள் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸார் விசாரணையில், ஏரியில் மிதந்த உடல்கள், நொண்டிமேடு பகுதியைச் சேர்ந்த நிர்மலா (35) மற்றும் அவரது 5 வயது மகள் ஹரிணி என்பது தெரியவந்தது.

நிர்மலாவின் கணவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அன்று முதல் நிர்மலா விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல் நிர்மலா மற்றும் அவரது மகள் தனியாக வசித்து வந்ததும், ஹரிணி உதகையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்ததும் தெரியவந்தது.

நிர்மலா நேற்று மாலை தனது மகளைப் பள்ளியிலிருந்து அழைத்து வருவதாகக் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் அவர்களைத் தேடி வந்த நிலையில் இருவரது உடல்களும் ஏரியில் கண்டெடுக்கப்பட்டது. உதகை ஜி1 காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றம்தற்கொலைCrimeSuicideதமிழகம்உதகைஊட்டி
Popular Articles

You May Like

More From This Category

More From this Author