

மதுரை: அலங்காநல்லூர் அருகே பெண் ஆய்வாளர் வீட்டில் 250 பவுன் நகை திருடிய கொள்ளையர்களைப் பிடிக்க 4 தனிப்படை அமைத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆய்வாளரின் வீடு மராமத்து பணி செய்தவர்கள் மீது சந்தேகம் எழுந்ததால் அவர்களிடமும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரம் மீனாட்சிநகர் பகுதியைச் சேர்ந்தவர் உதய கண்ணன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சர்மிளா (42). இவர், திண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிகிறார். கணவர் வெளிநாட்டில் பணிபுரிவதால் தனது தாய் மற்றும் மகன், மகளுடன் சர்மிளா மீனாட்சிபுரம் பகுதியில் வசித்து வருகிறார். தற்போது, இவரது வீட்டில் பெயிண்ட் அடித்தல், அலமாரிகளைப் புதுப்பித்தல் போன்ற பராமரிப்பு பணிகள் நடந்தது.
இந்நிலையில், கடந்த 2 நாளுக்கு முன்பு சர்மிளா தனது குடும்பத்தினருடன் வெளியில் சென்றிருந்த நிலையில், கதவு உடைக்கப்பட்டு, சுமார் 250 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் பணம் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து சர்மிளா அலங்காநல்லூர் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்பி அரவிந்தன், டிஎஸ்பி கிருஷ்ணன் , ஆய்வாளர் மன்னவன் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினர். எஸ்பி உத்தரவின் பேரில், டிஎஸ்பி கிருஷ்ணன் , ஆய்வாளர்கள் மன்னவன் (அலங்காநல்லூர்), நவனீதன் (நாகமலை புதுக்கோட்டை), எஸ்ஐ கார்த்திக் (ஊமச்சிகுளம்) தலைமையிலும், மற்றும் எஸ்பியின் தனிக்குழுவினர் என, 4 தனிப்படையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
சந்தேக அழைப்பை கண்டறியும் வகையில், ஆய்வாளர் சர்மிளா வீட்டில் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட 7 பேர் மற்றும் அவரது வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற உறவினர்கள், குடும்பத்தினர் உள்ளிட்டோரின் செல்போன்களின் அழைப்புகள் ஆய்வு செய்யப்படுகிறது. மேலும், அலங்காநல்லூர் பகுதியில் சோதனை சாவடிகளிலுள்ள சிசிடிவி கேமரா பதிவு, பழைய குற்றவாளிகள் என, பல்வேறு வகையிலும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: “ஆய்வாளர் சர்மிளா வீட்டில் பெயிண்ட் அடித்தல் போன்ற பராமரிப்பு பணி தொடர்ந்து நடந்துள்ளது. சர்மிளாவும் அவரது மகனும் வேலைக்குச் செல்வதால் ஆய்வாளரின் தாய் மட்டுமே வீட்டில் இருந்து, பராமரிப்பு பணிகளை கவனித்துள்ளார். இதற்கிடையில், 2 நாட்களுக்கு முன்பு குடும்பத்தினர் அனைவரும் வெளியில் சென்றுவிட்டு திரும்பியபோதுதான் நகை, பணம் திருடுபோனது தெரிய வந்துள்ளது. ஒருவேளை வீட்டில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டவர்கள் வீட்டிலுள்ள பொருட்களை நோட்டமிட்டு, வீட்டில் யாருமில்லாத நேரத்தை பயன்படுத்தி கொள்ளை அடித்திருக்கலாம், என, சந்தேகிக்கப்படுகிறது.
எனவே, அவர்களை தனித் தனியே வரவழைத்து விசாரித்துள்ளோம். அவர்களின் செல்போன் செயல்பாடு முழுமையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. குடும்பத்தினரின் செல்போன் தகவல்களையும் சேகரித்து விசாரணையைத் தொடங்கியுள்ளோம். மேலும், அப்பகுதியிலும் பழைய குற்றவாளிகளின் செல்போன் எண்களும் சேகரிக்கப்பட்டு, சம்பவத்தன்று அவர்களின் நடமாட்டம் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் விசாரிக்கிறோம். ஓரிரு நாளில் கொள்ளையர்களை பிடித்துவிடுவோம் என நம்புகிறோம்” என்றனர்.