Published : 29 Apr 2024 06:25 AM
Last Updated : 29 Apr 2024 06:25 AM

திருவள்ளூர் | மீஞ்சூரில் பழிக்கு பழியாக இளைஞர் கொலை

திருவள்ளூர்: மீஞ்சூர் பகுதியில் பழிக்குப் பழியாக இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பஜார் பகுதியில் நேற்று அதிகாலையில் சாலையில் துணியால் சுற்றப்பட்ட மூட்டை ஒன்று கிடந்தது. அப்போது, அவ்வழியாக வந்த சிலர் வாகனத்திலிருந்து காய்கறி மூட்டை விழுந்திருக்கலாம் எனக்கருதி அந்த மூட்டையைத் தூக்கினர்.

அப்போது, அந்த மூட்டையில் இருந்து துண்டிக்கப்பட்ட கை வெளியே வந்து விழுந்தது. மேலும், சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட ஓர் இளைஞரின் உடல் அந்த மூட்டையில் இருந்தது. அதை கண்ட அவர்கள் மீஞ்சூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர். தலை இல்லாத உடல் மட்டுமே மூட்டையில் இருந்ததால் போலீஸார் கலக்கமடைந்தனர். பின்னர் அந்த இளைஞரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து ஆவடி காவல் ஆணையரக இணை ஆணையர் பாலகிருஷ்ணன், உதவி ஆணையர் ராஜா ராபர்ட் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர். போலீஸார் தனிப்படை அமைத்து துண்டிக்கப்பட்ட தலையைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது, சோழவரம் அருகே உள்ள பெருங்காவூர் காலனி சுடுகாட்டில் துண்டிக்கப்பட்ட தலையைக் கண்டுபிடித்தனர்.

முதற்கட்ட விசாரணையில், இளைஞர் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு உடலை மட்டும் துணியால் சுற்றி எடுத்து வந்து மீஞ்சூர் காந்தி சாலையில் வீசிவிட்டுச் சென்றிருப்பது தெரிய வந்தது. கொலை செய்யப்பட்ட இளைஞர் பொன்னேரியை அடுத்த வஞ்சிவாக்கம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் குமார் (26) எனத் தெரியவந்தது. அஸ்வின் குமார் மீது திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் கஞ்சா கடத்தல் உள்ளிட்ட 3 வழக்குகள் உள்ளன.

கடந்தாண்டு செங்குன்றம் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் உடற்பயிற்சி கூடத்தில் முன்விரோதம் காரணமாக பெருங்காவூரை சேர்ந்த அஜீத்குமார் என்பவர் உள்ளிட்ட 3 பேர் கொலை செய்யப்பட்டனர். அஜீத்குமாரின் சமாதியின் மீது துண்டிக்கப்பட்ட அஸ்வின் குமாரின் தலையை வைத்து பழி தீர்த்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அஜீத்குமார் உள்ளிட்ட மூவர் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான கருப்பு அஜீத் என்பவருடைய பிறந்தநாள் நேற்றுகொண்டாடப்பட்டதாகவும், அஸ்வின்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு அஜீத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்டதால் அஜீத்குமாரின் நண்பர்கள் பழி தீர்ப்பதற்காக அஸ்வின்குமாரை கொலை செய்து தலையைத் துண்டித்து சமாதியில் வைத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக 3 பேரைப் பிடித்துபோலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x