

மதுரை: மதுரை - கூடல்புதூர் பகுதியில் பட்டப்பகலில் லோடுமேன் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிந்துள்ள போலீஸார், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் அருள்முருகன் (29). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் அருள்முருகன் லோடுமேனாக பணிபுரிந்து வந்தார். வெள்ளிக்கிழமை மதியம் விளாங்குடி பகுதியில் அவர் நடந்து சென்றபோது, திடீரென வழிமறித்த கும்பல் ஒன்று அருள்முருகனை அரிவாளால் சரமாரியாக வெட்டியது.
அந்தக் கும்பல் அருள்முருகனின் கையை தனியாக வெட்டி துண்டித்ததோடு, முகத்தையும் வெட்டி சிதைத்துள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மக்கள் கூட்டம் ஓடிவருவதைத் தொடர்ந்து அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
இதுபற்றி தகவல் அறிந்த கூடல்புதூர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அருள்முருகனின் உடலை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதுரை விரகனூர் அருகோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்மேடு பகுதியில் நடந்த கொலை சம்பவத்துக்கு பழிக்குப் பழியாக அருள் முருகன் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். கொலையாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.