Published : 22 Mar 2024 07:12 AM
Last Updated : 22 Mar 2024 07:12 AM

மயிலாடுதுறையில் இளைஞர் கொலை: உறவினர்கள் சாலை மறியல், கடையடைப்பு

மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் நேற்று பாதுகாப்புக்காக குவிக்கப் பட்டிருந்த போலீஸார். (உள்படம்) அஜித்குமார். படம்: வீ.தமிழன்பன்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் இளைஞர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பலஇடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. மயிலாடுதுறை கலைஞர் நகரைச் சேர்ந்தவர் லோகநாதன் மகன் அஜித்குமார்(26). இவர் நேற்று முன்தினம் இரவு அதேபகுதியைச் சேர்ந்த சரவணன்(32) என்பவருடன் இருசக்கர வாகனத்தில், சென்றுகொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த சிலர் இவர்களை வழிமறித்து, அஜித்குமாரை அரிவாளால் வெட்டினர். இதில் அவர் தலை துண்டிக்கப்பட்டு, அந்த இடத்திலேயே உயிரிழந்தார். தடுக்க முயன்ற சரவணன் பலத்த காயமடைந்தார். தகவலறிந்து வந்த போலீஸார் அஜித்குமார் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காயமடைந்த சரவணன்தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

2022-ல் வன்னியர் சங்கப் பிரமுகர் கண்ணன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அஜித்குமார் கைதுசெய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்தவர். இதன் தொடர்ச்சியாக அஜித்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

இதற்கிடையே, அஜித்குமாரை கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்றுபிற்பகல் வரை கிட்டப்பா அங்காடி,அரசு மருத்துவமனை அருகில், அண்ணா சிலை உள்ளிட்ட இடங்களில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி,எஸ்.பி. மீனா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும், அவர்கள் சமாதானம் அடையவில்லை.

மேலும், விசிக மாவட்டச் செயலாளர் மோகன்குமார் தலைமையில் கிட்டப்பா அங்காடி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டங்களின்போது ஓரிரு கடைகள் சேதப்படுத்தப்பட்டதால், காந்திஜி சாலை, பட்டமங்கலத் தெரு, கச்சேரி சாலை, காமராஜர் பேருந்து நிலையம் உள்ளிட்டப் பகுதிகளில் இருந்த கடைகள் நேற்று மூடப்பட்டன.

பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மயிலாடுதுறை நகரப் பகுதியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

7 பேர் கைது: இதனிடையே வழக்கில் தொடர்புடைய மயிலாடுதுறை தோப்பு கொத்ததெருவைச் சேர்ந்த பில்கி(எ) சந்திரமோகன்(29), மணக்குடி சதீஷ்(26), மயிலாடுதுறை திருவாரூர் சாலையைச் சேர்ந்த பாம் பாலாஜி(எ) பாலாஜி(29), சித்தமல்லி அக்ரஹார தெருவைச் சேர்ந்த ராம், திருவிழந்தூர் கீழவீதி சந்திரமவுலி, மணல்மேடு வக்கார மாரி வடக்குத் தெரு மோகன் தாஸ்(28), மயிலாடுதுறை தருமபுரம் சாலை சத்தியநாதன்(20) ஆகிய 7 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x