Published : 13 Mar 2024 04:00 AM
Last Updated : 13 Mar 2024 04:00 AM

நீலகிரி: காட்டு மாடு வேட்டை வழக்கில் காங்கிரஸ் கவுன்சிலர் கைது

மண்டப சாஜி | கோப்புப் படம்

உதகை: நீலகிரி மாவட்டத்தில் காட்டு மாடுகளை வேட்டையாடி பணம் சம்பாதித்து வந்த கும்பலுக்கு கள்ளத் துப்பாக்கி வாங்கி கொடுத்து மூளையாக செயல்பட்ட காங்கிரஸ் கவுன்சிலர் மண்டப சாஜியை வனத்துறையினர் கைது செய்தனர்.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் 19-ம் தேதி குந்தா வனச்சரகம், காட்டேரி அணை செல்லும் வழியில் காட்டு மாடு துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. கண்காணிப்பு கேமரா அடிப்படையில் ஆய்வு செய்து சந்தேகத்தின் பேரில் அந்த வழியாக கார்களில் வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் போலீஸார் தங்களைத் தேடுவதை அறிந்த வேட்டை கும்பல், கேரளா, கர்நாடகா மற்றும் கூடலூர் பகுதியில் ஆங்காங்கே பதுங்கினர். தொடர்ந்து கண்காணித்த தனிப்படையினர் டிசம்பர் 6-ம் தேதி கூடலூரை சேர்ந்த சிபு, சத்தீஷ், சுரேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் வெளியாகின.

கூடலூரை சேர்ந்த காங்கிரஸ் கட்சி பிரமுகரும் ஓவேலி பேரூராட்சியின் 2-வது வார்டு கவுன்சிலருமான மண்டப சாஜி ( 52 ) என்பவர் வேட்டை கும்பலுக்கு கள்ளத் துப்பாக்கி வாங்கிக் கொடுத்ததும், காட்டு மாடுகளை தொடர்ந்து வேட்டையாடி அதன் இறைச்சியை விற்ற கும்பலில் மண்டப சாஜியின் சகோதரர் மண்டபத்தில் சைஜு ( 48 ), கேபி ஜூலெட் ( 35 ), குட்டன் என்கிற குட்டி கிருஷ்ணன் ( 44 ), ஜோஸ் குட்டி ( 39 ) ஆகியோருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து மண்டப சாஜி உட்பட மற்ற 5 பேரையும் பிடிக்க வனத்துறையினர் முயன்ற போது அவர்கள் தலைமறைவாகினர். 5 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். முன் ஜாமீன் கிடைக்காததால் மண்டப சாஜியின் சகோதரர் மண்டபத்தில் சைஜு, கேபி ஜுலெட், குட்டி கிருஷ்ணன், ஜோஸ் குட்டி ஆகிய 4 பேரும் கடந்த 7-ம் தேதி உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

அவர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட மண்டப சாஜி மட்டும் தலை மறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மண்டப சாஜி உதகைக்கு வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து உதகை அருகே உள்ள பிங்கர் போஸ்ட் பகுதியில் வாகனத்தில் வந்த மண்டப சாஜியை தனிப்படையினர் மடக்கிப் பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x