Published : 07 Mar 2024 05:08 AM
Last Updated : 07 Mar 2024 05:08 AM

10,000 போதை மாத்திரைகள் ஈரோடு, நாமக்கல்லில் பறிமுதல்: ஆன்லைனில் வாங்கி விற்ற 15 பேர் கைது

பிரதிநிதித்துவப் படம்

நாமக்கல்: ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் வலி நிவாரண மாத்திரைகளை ஆன்லைனில் வாங்கி போதைக்காக விற்பனை செய்த 15 பேரை போலீஸார் கைது செய்தனர். ரூ.30 லட்சம் மதிப்புள்ள மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம் (25). கட்டிடத் தொழிலாளியான இவர் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ‘நானும், எனது நண்பர்களும் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தி வந்தோம். தற்போது, நான் பயன்படுத்துவது இல்லை. எனினும், இந்த மாத்திரைகளை பயன்படுத்துமாறு நண்பர்கள் என்னை கட்டாயப்படுத்தி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து விசாரிக்க நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில், திருச்செங்கோடு டிஎஸ்பி இமயவரம்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தலா ரூ.200 முதல் ரூ.300 என்ற விலையில் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி போதைக்காக தண்ணீரில் கரைத்தும், ஊசி மூலம் உடலில் செலுத்தியும் பயன்படுத்தி வந்துள்ளனர் என்று தனிப்படையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, இந்த மாத்திரைகளை ஆன்லைனில் வாங்கி உள்ளூர் பகுதியில் விற்பனை செய்த பள்ளிபாளையத்தை சேர்ந்த கிரிஹரன் (26), மாதவன் (18), தென்னரசு (18), சுஜித் (26),லட்சுமணன் (22), இலியாஸ் உல்லா, கலியனூர் கவுரி சங்கர் (21),தீபன் (21), நந்தகுமார் (19), பிரவீன் (18), ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த விக்னேஷ் (24), கருங்கல்பாளையம் கவுதம் குமார் (32), சேலம் மாவட்டம் சங்ககிரி சுஜித் (21), ராசிபுரத்தானூர் யுவராஜ் (24), மறவம்பாளையத்தான்காடுகவுதம் (23) ஆகிய 15 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள10 ஆயிரம் வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் கூறும்போது, “ஆன்லைனில் இந்த மாத்திரைகள் வாங்கப்பட்டுள்ளன. குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் கூரியர் மூலம் வந்துள்ளன. மாத்திரைகளை விநியோகம் செய்தவர்கள் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. அவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x