Published : 17 Nov 2023 07:07 AM
Last Updated : 17 Nov 2023 07:07 AM

டெல்லி மருத்துவமனையில் 7 நோயாளிகள் உயிரிழப்பு: அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்கள் உட்பட 4 பேர் கைது

புதுடெல்லி: டெல்லியில் உள்ள மருத்துவமனையில் போலி மருத்துவர்களின் அறுவை சிகிச்சையால் இதுவரை 7 நோயாளிகள் உயிரிழந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தெற்கு டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் டாக்டர் நீரஜ் அகர்வால் என்பவர் அகர்வால் மருத்துவ மையம் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவர் சாதாரண மருத்துவர். அறுவை சிகிச்சை நிபுணர் அல்ல. ஆனால், போலி ஆவணங்களை வைத்துக் கொண்டு இவர் தனதுமருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார்.

இவரது மருத்துவமனையில் அஷ்கர் அலி என்பவர் பித்தப்பை அறுவை சிகிச்சைக்காக கடந்தாண்டு அனுமதிக்கப்பட்டார். இவருக்கு தகுதி பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜஸ்ப்ரீத்சிங் அறுவை சிகிச்சை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆபரேஷன் தியேட்டரில் டாக்டர் நீரஜ் அகர்வால் அவரதுமனைவி பூஜா, லேப் டெக்னீஷியன் மகேந்திர சிங் என்பவரும் நுழைந்து அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

அறுவை சிகிச்சைக்குப்பின் அஷ்கர் அலி கடும் வலியால் துடித்துள்ளார். இதனால் அவர் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். ஆனால், அவர் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்துவிட்டார். இங்கு போலி மருத்துவர்கள், தவறான முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதாக அஷ்கர் அலி உறவினர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து 4 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ வாரியம் அகர்வால் மருத்துவ மையத்தில் கடந்த 1-ம் தேதி ஆய்வு மேற்கொண்டது். இதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின. இது குறித்து காவல்துறை துணை ஆணையர் சந்தன் சவுத்திரி கூறியதாவது:

கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து டாக்டர் அகர்வாலுக்கு எதிராக 9 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. மருத்துவ கவனக்குறைவு காரணமாக, இதுவரை 7 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். போலி ஆவணங்களை வைத்துக்கொண்டு டாக்டர் நீரஜ் அகர்வால் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். மருத்துவரின் கையெழுத்து மட்டும்அடங்கிய 414 வெற்று மருந்துசீட்டுகளும் அவரது மருத்துவமனையில் கைப்பற்றப்பட்டன. இங்கு கருக்கலைப்பு செய்தவர்களின் விவரங்கள் அடங்கிய இரண்டு பதிவேடுகளும் கைப்பற்றப்பட்டன. தடை செய்யப்பட்ட மருந்துகள், ஊசிகள் ஆகியவற்றை இவர்கள் இருப்பில் வைத்திருந்தனர். காலவதியான அறுவை சிகிச்சை உபகரணங்கள், 47 வங்கிகளின் காசோலைகள், 54 ஏடிஎம் கார்டுகள், தபால்அலுவலக சேமிப்பு கணக்கு புத்தகங்கள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் கட்டணம் வசூலிக்கும் 6 பிஓஎஸ் இயந்திரங்கள் ஆகியவை நீரஜ் அகர்வாலின் வீடு மற்றும் மருத்துவமனையில் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு சந்தன் சவுத்திரி கூறினார்.

கடைசியாக 2 நோயாளிகள் இறந்தது தொடர்பாக டாக்டர் நீரஜ்அகர்வால், அவரது மனைவி பூஜா,டாக்டர் ஜஸ்ப்ரீத் சிங், லேப் டெக்னீஷியன் மகேந்திர சிங் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x