Last Updated : 13 Jul, 2023 07:00 AM

 

Published : 13 Jul 2023 07:00 AM
Last Updated : 13 Jul 2023 07:00 AM

ஐடி நிறுவன சிஇஓ., எம்.டி. கொலை: பெங்களூருவில் முன்னாள் ஊழியர்கள் 2 பேர் உட்பட 3 பேர் கைது

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அம்ருதஹள்ளியில், ‘ஏரோனிக்ஸ்’ என்ற ஐடி நிறுவனம் உள்ளது. இதன் தலைமை செல் அதிகாரியாக (சிஇஓ) வினு குமார் (40), நிர்வாக இயக்குநராக (எம்.டி.) பனீந்திர சுப்ரமண்யா (36) ஆகியோர் பணியாற்றினர். இருவரும் ஓராண்டுக்கு முன்பு பணியாற்றிய ‘ஜி நெட்’ என்ற ஐ.டி. நிறுவனத்தில் இருந்து கடந்த 6 மாதங்களாக மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை இருவரும் அலுவலகத்தில் தங்களது அறையில் இருந்தனர். அப்போது அங்கு வந்த ஜி நெட் ஊழியர்கள் சபரீஷ் (27), வின‌ய் ரெட்டி (23) மற்றும் சபரீஷின் நண்பர் சந்தோஷ் (26) ஆகியோர் வினு குமார், பனீந்திர சுப்ரமண்யா ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியால் இருவரையும் சரமாரியாக வெட்டினர்.

அவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு மற்ற ஊழியர்கள் ஓடி வந்தனர். அவர்களை தள்ளிவிட்டு கொலையாளிகள் 3 பேரும் காரில் தப்பிச் சென்றனர். இதையடுத்து படுகாயம் அடைந்த‌ வினு குமார், பனீந்திர சுப்ரமண்யா ஆகிய இருவரையும் ஹெப்பாளில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஊழியர்கள் கொண்டு சென்றனர். ஆனால், இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த பெங்களூரு வடகிழக்கு மண்டல துணை காவல் ஆணையர் லட்சுமி பிரசாத் சம்பவ இடத்துக்கு விரைந்தார். கொலை நடந்த இடம், சிசிடிவி கேமரா பதிவு, அங்கு கிடந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை சேகரித்தார். பின்னர் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டார். இதுகுறித்து துணை காவல் ஆணையர் லட்சுமி பிரசாத் கூறியதாவது:

சிசிடிவி மற்றும் நேரில் பார்த்தவர்களின் சாட்சியத்தின் அடிப்படையில் சபரீஷ் (27), வின‌ய் ரெட்டி (23) சந்தோஷ் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் முதல்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. வினு குமார், பனீந்திரா சுப்ரமண்யா பணியாற்றிய ஏரோனிக்ஸ் நிறுவனத்துக்கும் சபரீஷ், வின‌ய் ரெட்டி பணியாற்றும் ஜி நெட் நிறுவனத்துக்கும் தொழில் ரீதியான போட்டி இருந்துள்ளது. கடந்த ஆண்டு ஜி நெட் நிறுவனத்தில் இருந்து வினு குமார், பனீந்திரா சுப்ரமண்யா ஆகிய இருவரும் விலகியுள்ளனர்.

மேலும் தங்களது வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடிவிட்டதாக ஜி நெட் நிறுவனத்தார் இருவர் மீதும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில் இரு தரப்புக்கும் இடையே மோதல் நீடித்திருக்கிறது. இதன் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

இந்த இரட்டை கொலையில் இன்னும் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என விசாரித்து வருகிறோம். இவ்வாறு துணை காவல் ஆணையர் லட்சுமி பிரசாத் கூறினார்.

இன்ஸ்டாவில் பகிர்வு: கைது செய்யப்பட்டுள்ள சபரீஷ் இன்ஸ்டாகிராம், யூ டியூப் போன்ற சமூக வலைதளங்களில் ஜோக்கர் ஃபெலிக்ஸ் ராப்பர் என்ற பெயரில் பிரபலமாக வலம் வந்துள்ளார். கொலையில் ஈடுபடுவதற்கு 9 மணி நேரத்துக்கு முன்பு, "உலகில் மனிதர்கள் எல்லோரும் ஏமாற்றுக்காரர்களாக இருக்கின்றனர். அதனால் நான் இவர்களை காயப்படுத்துகிறேன். நான் கெட்டவர்களை மட்டுமே காயப்படுத்துகிறேன். எந்த நல்ல மனிதர்களையும் காயப்படுத்தவில்லை" என பதிவிட்டுள்ளார். சம்பவத்துக்கு பின்னர், கொலை செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x