Published : 09 Jun 2023 06:09 AM
Last Updated : 09 Jun 2023 06:09 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே அனுமதியின்றி இயங்கிய டாஸ்மாக் பாரில் மதுபானம் விற்கப்படுவதாக வந்த புகாரின்பேரில், அங்கு விசாரிக்கச் சென்ற காவலர்களை தாக்க முயன்ற திமுக நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கறம்பக்குடி அருகே உள்ள வாணக்கன்காடு கிராமத்தில் டாஸ்மாக் கடையில் அனுமதியின்றி பார் இயங்குவதாகவும், அதில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் வந்த புகார்களின் அடிப்படையில், தனிப்படை போலீஸார் முத்துக்குமார், மகேஸ்வரன் ஆகியோர் இரு தினங்களுக்கு முன் அங்கு விசாரணைக்குச் சென்றனர்.
அப்போது, அங்கு திமுக வடக்கு மாவட்டப் பிரதிநிதியும், முன்னாள் ஊராட்சித் தலைவருமான ஜி.மதியழகன்(55) என்பவர் அனுமதியின்றி நடத்தி வந்த பாரில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியைசேர்ந்த தி.பரிமளம்(49) என்பவரை பிடித்து தங்களது இருசக்கர வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.
அப்போது, அங்கு வந்த மதியழகன் காவலர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், வாகனத்தில் இருந்த பரிமளத்தை கீழே இறக்கிவிட்டுள்ளார். மேலும், இதைக் கண்டித்த காவலர்கள் இருவரையும் தாக்க முயற்சித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இந்நிலையில், மதியழகன், பரிமளம் ஆகியோர் மீது தகாத வார்த்தைகளால் பேசியது, பணி செய்யவிடாமல் தடுத்தது, தாக்கியது, அவமதிக்கும் வகையில் ஈடுபட்டது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வடகாடு போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT