Last Updated : 22 Mar, 2020 11:43 AM

 

Published : 22 Mar 2020 11:43 AM
Last Updated : 22 Mar 2020 11:43 AM

கரோனா வைரஸ்; பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு துறை ரீதியாக நிதியுதவி் அவசியம்: பிரதமர் மோடிக்கு சோனியா வலியுறுத்தல்

கரோனா வைரஸால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்க சிறப்பு நிதியுதவித் திட்டம் அவசியம் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

உலகையே உலுக்கி வரும் கரோனா வைரஸ் இந்தியாவுக்குள் புகுந்துவிட்டது. இதுவரை 4 பேரின் உயிரைப் பறித்துள்ள கரோனா வைரஸுக்கு 334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்தும், நோய்த் தொற்று சங்கிலியை உடைக்கும் வகையில் இன்று ஒருநாள் மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்க பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

மக்கள் காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம், கரோனாவுக்கு எதிரான பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், ஊழியர்கள் ஆகியோரை ஊக்குவிக்கும் வகையில் இன்று மாலை 5 மணிக்கு மக்கள் கை தட்ட வேண்டும் அல்லது வீடுகளில் மணியை ஒலிக்க விட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

பிரதமர் மோடியின் இந்தப் பேச்சுக்கு பதிலளித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் தெரிவித்த கருத்தில், “கரோனா வைரஸ் நம்முடைய பொருளாதாரத்தை அழித்து வருகிறது. சிறு, குறு வணிகர்கள், கூலித் தொழிலாளர்கள் மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள். கைதட்டுவதன் மூலம் அவர்களுக்கு உதவ முடியாது. கடன் மீட்பு, நிதியுதவி, வரிச்சலுகை போன்ற மிகப்பெரிய பொருளாதார மீட்புத் திட்டம் அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

'' கரோனா வைரஸைக் கண்டு மக்கள் யாரும் பதற்றமடையவோ, அச்சப்படவோ வேண்டாம். இந்த சோதனைக்கு நமது தேசம் தலை கவிழ்ந்துவிடாது. கரோனா வைரஸால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு துறைரீதியாக முழுமையான பொருளாதார மீட்பு திட்டத்தை அளி்க்க மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும்.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிய போதுமான ஆய்வுக்கூட வசதிகளை நாடு முழுவதும் அதிகப்படுத்துவது அவசியம். மருத்துவமனையின் விவரங்கள், மருத்துவ வசதிகள் ஆகியவற்றை தெளிவாக ஒரு போர்டலில் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
கரோனா வைரஸை எதிர்த்துப் போராட தனியாக பட்ஜெட்டில் சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும்.

அசாதாரணமான நேரத்தில் சில அசாதாரணமான நடவடிக்கைகள் அவசியம். துறைதீரியாக பொருளாதார மீட்புத் தி்ட்டங்களை மத்திய அரசு அறிவிப்பது அவசியம். குறிப்பாக வரிச்சலுகைகள், வட்டி தள்ளுபடி, கடன் திட்டம் போன்றவற்றை அளிக்கலாம். மாத ஊதியம் பெறுவோர் மாதம் தோறும் செலுத்தும் இஎம்ஐக்கள் சில மாதங்களுக்கு ஒத்திவைக்க ரிசர்வ் வங்கி மூலம் நடவடிக்கை எடுக்கலாம்.

கரோனா வைரஸால் உற்பத்தித்துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்பைச் சரிசெய்ய அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கலாம். குறிப்பாக லட்சக்கணக்கான கூலித்தொழிலாளர்கள், மகாத்மா காந்தி ஊரக திட்ட பணியாளர்கள், தற்காலிக ஊழியர்கள், விவசாயிகள், விவசாயக் கூலிகள், அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆகியோர் மிகப்பெரிய பாதிப்பை அடைந்துள்ளார்கள். அவர்களை மீட்கும் வகையில் முழுமையான நிதித்திட்டம் அவசியம்.

அனைத்து தொழில்களும், குறிப்பாத சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள், மிகப்பெரிய அழுத்தத்துக்கு கரோனா வைரஸால் ஆளாகியுள்ளார்கள். மிகப்பெரிய வேலைவாய்ப்புகளை வழங்கக் கூடிய வேளாண்துறையிலும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தடுப்பு நடவடிக்கையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையும்தான் மிகப்பெரிய தீர்வாக கரோனாவுக்கு அமையும். ஆதலால் மக்கள் அனைவரும் வீடுகளிலே இருக்க வேண்டும், அவசரத் தேவையைத் தவிர வெளிேய செல்லக்கூடாது.

கரோனா வைரஸை எதிர்த்துப் போராட ஒட்டுமொத்த தேசமும் தயாராக இருக்கிறது. அதற்கு முன் சில முக்கிய விஷயங்களில் உள்ள பிரச்சினைகளை மத்திய அரசு களைய வேண்டும்.

130 கோடி மக்கள் வாழும் தேசத்தில் 15,710 மாதிரிகள் மட்டுமே இதுவரை பரிசோதிக்கப்பட்டுள்ளன. முன்கூட்டியே எச்சரித்தல், மற்ற நாடுகளில் இருந்து பாடங்கள் கற்றல் போன்றவற்றைச் செய்ய வேண்டும். தனியார் துறையின் உதவியையும் இந்த நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

கரோனா அறிகுறியில் இருப்போர் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தி, அவர்களைக் கண்காணிக்க வேண்டும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதிக்க வேண்டும்.

கரோனா வைரஸால் பாதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான படுக்கைகள், தனிமைப்படுத்தும் இடங்கள், செயற்கை சுவாகச் கருவிகள், மருத்துவக் குழுக்கள், மருந்து சப்ளை நிறுவனங்கள் ஆகியவை பற்றி முழுமையான தகவல்களை அரசு தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு மருத்துவமனையும் அமைந்திருக்கும் இடம், அதன் அவசர எண், தொலைபேசி எண் ஆகியவற்றை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

தனி மனிதர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என் 95 முகக்கவசம், கையுறை, முகக்கவசம், தலைக்கவசம், ரப்பர் ஷூ, மருத்துவர்களுக்கான ஒருமுறை மட்டுமே அணியும் ஆடை போன்றவற்றுக்குத் தட்டுப்பாடு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனா வைரஸை எதிர்த்து நமது மருத்துவர்கள், ஊழியர்கள் போராடுவது பெருமையாக இருக்கிறது. அதேசமயம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாதார ரீதியாக உதவித்தொகை, நிதித் திட்டங்கள் வழங்குவது அவசியம்.

மக்களின் அத்தியாவசியப் பொருட்களான காய்கறிகள், பருப்புவகைகள், அரிசி உள்ளிட்டவை விலை உயராமல் அரசு கண்காணிக்க வேண்டும்''.

இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x