Last Updated : 20 Mar, 2020 03:13 PM

 

Published : 20 Mar 2020 03:13 PM
Last Updated : 20 Mar 2020 03:13 PM

கரோனா வைரஸ்: வதந்தி பரப்பியதாக மேட்டுப்பாளையம் இளைஞர் கைது

கரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பியதாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் ஏற்கெனவே கரோனா வைரஸ் தொற்று 3 பேருக்கு உறுதியாகியுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வணிக வளாகங்கள், திரையரங்குகள், சுற்றுலாத் தலங்கள், பெரிய கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனிடயே, கரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்க்கை எடுக்கப்படும் என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். அவ்வாறு வதந்தி பரப்புபவர்கள் மீதான கைது நடவடிக்கை தொடர்கிறது.

இந்நிலையில், கரோனா குறித்து வதந்தி பரப்பியதாக மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் அரவிந்தசாமி (27). இவர் மேட்டுப்பாளையத்துக்கு உட்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியுள்ளார்.

இதுதொடர்பான புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் காவல்துறையினர் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 505-ன் கீழ் வழக்குப்பதிந்து அரவிந்தசாமியை நேற்று (மார்ச் 19) இரவு கைது செய்தனர். பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x