

ஒரு நாட்டின் சட்டங்களும் அமைப்புகளும் மக்களுக்கு உதவவே அமைக்கப் பெற்றுள்ளன. ஒவ்வொரு நாட்டுக்கும் அவை மாறுபடுகின்றன. ஒரு நாட்டின் சட்ட திட்டங்கள் மற்ற நாட்டினருக்கு விநோதமானதாக இருந்தாலும், அந்த நாட்டைச் சேர்ந்தவருக்கு அது உதவி செய்யும் விதமாகத்தான் இருக்கிறது. சட்ட திட்டங்கள் கடுமையாக இருப்பது நல்லதுதான். ஆனால், சில இடங்களில் நெகிழ்வுத்தன்மையும் நடைமுறை சிக்கல்களையும் யோசிக்காமல் கண்மூடித்தனமாக அமைப்பையும் சட்டத்தையும் பின்பற்ற ஆரம்பித்தோமேயானால் என்ன நிகழும்?
இதனை 'ஐ, டேனியல் பிளேக்'-கில் பார்க்கலாம்.
இங்கிலாந்தில் வாழும் பிளேக்கிற்கு 80 வயதாகிறது. திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட, அவரால் இனி வேலைக்குச் செல்ல முடியாது என கூறுகிறது அரசும் அதன் சட்டங்களும். ஆனால், தன் உடல்நலம் நன்றாகத்தான் இருக்கிறது, தான் வேலைக்கு செல்ல முடியும் எனவும் சொல்கிறார். அதற்கெல்லம் அனுமதிகாத சட்டங்கள், அவரை ஓய்வில் இருக்கச் சொல்கிறது. அந்த ஓய்வில் இருக்கும்போது ஓய்வூதியம் பெறுவதற்கென்று கூட தனியே விண்ணப்பம் அளிக்க வேண்டும். இப்படி ஏகப்பட்ட சட்ட திட்டங்களால் அவதியுறுகிறார் பிளேக்.
இந்தச் சூழ்நிலையில் அவரைப் போன்றே அவதியுறும் கேட்டியைப் பார்க்கிறார். அவருக்கு உதவுகிறார். அந்தச் சட்டங்களும் அமைப்புகளையும் அவர்களை என்னவெல்லாம் செய்கிறது என்பதே 'ஐ, டேனியல் பிளேக்'.
கெடுபிடியான சட்ட திட்டங்கள் மக்களை குற்றம் செய்ய விடாமல் ஒழுங்குபடுத்தும் என நினைத்தால் அது தவறு என்பதை நமக்கு சொல்கிறார் பிளேக். மக்களுக்கு உதவக் கூடிய வகையில்தான் சட்டங்கள் இருக்க வேண்டும். மக்களுக்காகத்தான் சட்டங்களும் அமைப்புகளும்; சட்டங்களுக்காக மக்கள் இல்லை என சொல்கிறது பிளேக்கிற்கும் கேட்டிற்கும் நடக்கும் சம்பவங்கள் சொல்கின்றன.
டாக்டரிடம் பிளேக் சொல்லும் பதில்கள் சிரிப்பை ஏற்படுத்தினாலும், உண்மையில் இங்கிலாந்தில் சமூக அமைப்பு அவ்வளவு இறுக்கமாக இருக்கிறது என்பதே அவ்வளவு கிண்டலாக வெளிவருகிறது. அங்கே இருக்கும் அரசு அமைப்புகள் மட்டுமல்ல; தனியார் கடைகளும் கூட சட்ட திட்டங்களை கடுமையாக பின்பற்றுகின்றன. வேறு வழி இல்லாமல் செய்யக் கூடாத தொழிலைச் செய்கிறாள் கேட்டி. இப்படி படம் முழுக்க இங்கிலாந்தின் அமைப்பின் மீது விமர்சனங்களை வைக்கிறது. அதனை மக்களுக்கு புரியாத வகையில் சொல்லாமல் மிக வெளிப்படையாக தைரியமாக அந்த கடுமையான அமைப்பினால் பாதிக்கப்பட்ட மனிதர்களை வைத்து கதையைச் சொல்லியிருக்கிறார் கென் லோச்.
சட்டங்கள் மூலம் எந்த உதவியையும் பெற முடியாத கேட்டிற்கு பிளேக் உதவி செய்கிறான். அவளது குழந்தைகளுக்கு பரிசுகளைக் கொடுக்கிறார். ஏறக்குறைய தாத்தாவைப் போல இருக்கிறார். பிளேகினைச் சுற்றி இருக்கும் அனைவருக்கும் அவரால் முடிந்த அளவுக்கு உதவி செய்கிறார். ஆனால், அவரால் சட்ட திட்டங்களோடு போராட முடியவில்லை. 80 வயதான அவரை கணினியில் இணையத்தைப் பயன்படுத்தி விண்ணப்பங்களை நிரப்பச் சொல்வது என்பது அதிகபட்சமான நகைச்சுவையாக இருந்தாலும், நடைமுறைச் சிக்கல் என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். நெஞ்சு வலியின் காரணமாக வேலைக்குச் செல்ல முடியாமல் அவருக்கு தேவையான உதவித்தொகையைப் பெறுவதற்கு மேல்முறையிடுகள் செய்தும் பலனில்லாமல் சோர்ந்து போகிறார்.
உணவு வங்கியில் கேட்டியினால் பசியை அடக்க முடியாமல் அங்கேயே சாப்பிடுவதும், உடல்நலம் இல்லாமல் பிளேக் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும்போது கேட்டியின் மகள் பிளேக்கிடம் பேசும் வசனங்களும் இங்கிலாந்தின் அமைப்பினால் பாதிக்கப்படும் மனிதர்களின் உட்சபட்ச வலியை நமக்கு கடத்துகிறது. அதேநேரத்தில் படம் நெடுகிலும் நம்மை அழ வைக்காமல் அந்த நாட்டின் சட்டதிட்டங்கள் மீதான கிண்டலின் மூலமே காட்சிகளை நகர்த்துகின்றனர்.
எல்லா முயற்சிகளையும் செய்து சோர்ந்து போன பிளேக் கடைசியாக தனது எதிர்ப்புக் குரலை சுவரில் எழுதிக் காட்டுகிறார். அவ்வளவு கட்டுப்பாடான நாட்டின் இதற்கான எதிர்விளைவுகள் எப்படி இருக்கும்? எல்லாவற்றையும் தந்து 80-வது வயதிலும் எதிர்கொள்கிறார்.
உலகில் வளர்ந்த நாடாக இருக்கும் இங்கிலாந்தின் சட்ட திட்டங்கள் எளிய மக்களை எப்படியெல்லாம் அவதிக்குள்ளாக்குகிறது என்பதை பிளேக்கின் அந்தக் கடிதத்தில் இருக்கும் வார்த்தைகள் நமக்கு சொல்கின்றன.
'நான் பிச்சைக்காரன் இல்லை, திருடன் இல்லை, பணக்காரனும் இல்லை, என்னுடைய சுமாரியாதையை எங்கேயும் இழக்க விரும்பவில்லை. அதேநேரத்தில் நான் நாயும் இல்லை. நான் இந்த நாட்டின் குடிமகன், எனக்கான உரிமைகள் என்னைக் காப்பற்றும்.'
இந்த வார்த்தைகள்தான் பிளேக்கின், கேட்டியின் நிலையை இங்கிலாந்தின் எளிய மனிதர்களின் நிலையை விளக்குகிறது.
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்தத் திரைப்படம் கடந்த மே மாதம் நடைபெற்ற கான்ஸ் திரைப்பட விழாவில் தங்கப்பனை விருதினை வென்றுள்ளது. 'ஐ, டேனியல் பிளேக்' இங்கிலாந்தினை கிண்டல் செய்யும் அருமையான திரை அனுபவம்.
- சா.ஜெ.முகில் தங்கம், தொடர்புக்கு: mukilthangam@gmail.com