

தமிழக முதல்வரும், நடிகருமான விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தணிக்கை பிரச்சினையால் வெளியாகவில்லை. தணிக்கை வாரியத்தின் மறுஆய்வு குழு முன்பாக இந்தப்படம் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இப் படம் கடந்த ஏப்.3 அன்று சட்டவிரோதமாக இணையத்தில் கசிந்தது. இதுதொடர்பாக தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக் ஷன்ஸ் அளித்த புகாரின் பேரில் சென்னை சைபர் க்ரைம் போலீஸார் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து பலரை கைது செய்துள்ளனர். இன்னும் சிலரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வரும் பிரதீப்குமார் என்பவர் தனக்கு முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சி.குமரப்பன் முன்பாக நடந்தது.
அப்போது படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், ‘மனுதாரரான பிரதீப்குமார் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி என்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது’ என கடும் ஆட்சேபம் தெரிவி்த்தார். அதையடுத்து பிரதீப்குமாரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.