Published : 04 Sep 2017 07:36 AM
Last Updated : 04 Sep 2017 07:36 AM

அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை: மத்திய, மாநில அரசுகளுக்கு இயக்குநர்கள் கண்டனம்

அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமான நீட் தேர்வை கொண்டு வந்த மத்திய அரசுக்கும், அதை கண்டும் காணாமல் விட்ட மாநில அரசுக்கும் கண்டனம் தெரிவித்து திரையுலகினர் தொடர்ந்து தங்கள் கருத்துகளைப் பதிவுசெய்து வருகின்றனர்.

இயக்குநர் சேரன்: அனிதா, நீ அழித்துக்கொள்ளவில்லை. அடையாளம் ஆகிவிட்டாய். அறியா சனங்களின் அறியாமையை பணம் பண்ண நினைத்த அரசியல்வாதிகளின் கோரப்பிடியில் கல்வி மாட்டிக்கொள்ள, தனியார் கல்வி நிறுவனப் பேய்கள் விஸ்வரூபம் எடுக்க, சூதாடி கபடநாடகம் ஆடிய வேடதாரிகள் தங்கள் பணபலம் பெருக்க, புதிது புதிதாய் தேர்வுமுறையும் கொண்டு வந்தது கல்வி வளர்க்க அல்ல; அவர்தம் வருமானம் செழிக்கவேதான். இந்த வேடதாரி வாழ்க்கைக்குள் ஒரு தூய மான் நீ ஏனம்மா சென்றாய்! ஓநாய் கூட்டத்துக்கு உன் கனவா தெரியும்?

இயக்குநர் சுசீந்திரன்: சேவை மனப்பான்மை உடைய உன்னதமான ஒரு டாக்டரை இழந்துவிட்டோம். அனிதா போன்ற ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளை டாக்டர்களாக உருவாக நீட் தேர்வை எதிர்த்து ஒன்றுசேர்ந்து போராடுவோம்.

இயக்குநர் அமீர்: அனிதாவின் மரணம், பல்வேறு கேள்விகளை எழுப்பப்போகிறது. ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு ஒன்றில், பொது நுழைவுத்தேர்வு நடத்தினாலும், அந்தந்த மாநில உரிமைக்கு ஏற்ப முடிவெடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதை மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும். ஆனால், ஆட்சியாளர்கள் இதற்காகப் போராடாமல், பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ளவே முன்னுரிமை தருகின்றனர். ரஜினி, கமல் யாராக இருந்தாலும், மக்களுக்கான நல்ல பணியைச் செய்ய முன்வந்தால் அதில் இணைவேன்.

இயக்குநர்கள் வெற்றிமாறன், கரு.பழனியப்பன், பா.இரஞ்சித், மகிழ்திருமேனி, ஜி.வி.பிரகாஷ், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பலரும் சென்னை லயோலா கல்லூரியில் நேற்று மாலை கூடி கண்டன உரை நிகழ்த்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x