Last Updated : 27 Sep, 2017 06:54 PM

 

Published : 27 Sep 2017 06:54 PM
Last Updated : 27 Sep 2017 06:54 PM

முதல் பார்வை: ஸ்பைடர் - முருகதாஸ் பாணி சினிமா!

நகரத்தை அசம்பாவிதங்களால் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் குற்றவாளியை தேடிப் பிடித்து தண்டிக்கும் அதிகாரியின் கதையே 'ஸ்பைடர்'.

இன்டெலிஜென்ஸ் பியூரோவில் சாதாரண அதிகாரியாகப் பணிபுரிகிறார் மகேஷ் பாபு. பொதுமக்களின் போன் கால்களை ஒட்டுகேட்கும் வேலையைச் செய்து வரும் மகேஷ் பாபு அவர்களின் பிரச்சினைகளையும் தீர்க்க முயற்சிக்கிறார். ஒரு நாள் யதேச்சையாக 10-ம் வகுப்பு மாணவியைக் காப்பாற்ற தன் தோழியான கான்ஸ்டபிளை அனுப்புகிறார்.  அந்த இரவில் மாணவியும், கான்ஸ்டபிளும்  கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள். ஏன் அந்தக் கொலைகள் நிகழ்கின்றன, குற்றவாளி யார், இன்டெலிஜென்ட் அதிகாரியால் கண்டுபிடிக்க முடிந்ததா, போலீஸ் என்ன செய்தது என்பது மீதிக் கதை.

தெலுங்கில் பட்டையக் கிளப்பும் நடிகராக ஹிட் லிஸ்டில் இடம்பெறும் மகேஷ் பாபு தமிழில் 'ஸ்பைடர்' மூலம் தன் வருகையை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.  நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, புத்திசாலித்தனம், விரைந்து செயல்படுதல், நடனக் காட்சிகள், சண்டைக் காட்சிகள் என நாயகனுக்கான அனைத்து அம்சங்களையும் சிறப்பாக செய்து முடிக்கிறார். ஆனால், உணர்வுபூர்வமான காட்சிகளில் எந்த எக்ஸ்பிரஷனையும் காட்டாமல் இருப்பது காட்சியின் ஜீவனைக் குறைத்து விடுகிறது.

கதாநாயகிக்கான வழக்கமான பங்களிப்பை ரகுல் ப்ரீத் சிங் கடமையென செய்கிறார். ஆர்.ஜே.பாலாஜி ஓரிரு இடங்களில் மட்டும் கவுன்டர் வசனங்களால் கலகலக்க வைக்கிறார். ஜெயப்பிரகாஷ், தீபா ராமானுஜம், ஷாஜி, சாயாஜி ஷிண்டே, ஹரீஷ் ஆகியோர் வந்து போகிறார்கள்.

பரத் முக்கிய பாத்திரத்தில் நடித்தாலும் அது வலுவாக இல்லை. அவருக்கான இடம் குறைவாகவே உள்ளது.

பார்த்ததும் பயப்படுகிற மாதிரியான மிரட்டலான கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா பின்னி எடுக்கிறார். கோபம், அழுகை, ஆற்றாமை என நுட்பமான உணர்வுகளையும், உச்சரிப்பிலும் பக்குவப்பட்ட, துல்லியமான நடிப்பை வழங்கி இருக்கிறார். அவருக்கு இனி பிரகாசமான வாய்ப்புகள் அமையும் என்று நம்பலாம். கண்களின் வழியே வெளிப்படுத்தும் அச்சமும், அழுகையும் அவரை தேர்ந்த நடிகனாக அடையாளம் காட்டுகின்றன.

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு படத்துக்கு கூடுதல் பலம். ஹாரீஸ் ஜெயராஜ் சில இடங்களில் அதிரடியைக் கூட்டுகிறார். சில இடங்களில் இரைச்சலால் இம்சிக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் பாடல்களுக்கு கத்தரி போட்டிருக்கலாம்.

தெலுங்கில் பிரின்ஸ் என்று கொண்டாடப்படுகிற மகேஷ் பாபுவின் நேரடி தமிழ்ப் படம் என்பதால் மாஸ் பில்டப், பன்ச் வசனம், ஹீரோயிசம் என்று பதிவு செய்யாமல் இயல்பான திரைக்கதையின் ஊடே நடிக்க வைத்திருப்பது ஆரோக்கியமான விஷயம். வில்லன் தன் வீட்டில் நுழைந்த பிறகு எப்படி அம்மாவையும், தம்பியையும் காப்பாற்றுகிறார் ஹீரோ என்பதை காட்சிப்படுத்திய விதம் புத்திசாலித்தனமாகவும், ரசிக்கும்படியும் இருந்தது. எஸ்.ஜே.சூர்யாவின் பாத்திரப் படைப்பை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மிகுந்த கவனத்துடன் செதுக்கி இருக்கிறார். அப்பாத்திரத்துக்கான உழைப்பு பாராட்டுக்குரியது.

பெண்களுக்கான முக்கியத்துவத்தை படத்தில் அளிக்க முருகதாஸ் முடிவு செய்திருப்பதில் பிரச்சினை இல்லை. ஆனால், நடுத்தர வயதுள்ள பெண்கள் சாகசம் செய்வதாகக் காட்டுவதை நம்ப முடியவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக விசாரணைக் குழுவில் இருக்கும் ஒரு சாதாரண அதிகாரி ஒட்டுமொத்த காவல்துறையையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து வில்லனைத் தேடிப் பிடிப்பது மிகையாகவே உள்ளது. அந்த தேடலுக்குப் பிறகு கொடுக்கப்படும் தண்டனை வழக்கமானதாகவே உள்ளது. ஆக்‌ஷன் காட்சிகள், இறுதிக் காட்சியில் இயக்குநர் மிகுந்த கவனம் செலுத்தி இருக்கலாம்.

மொத்தமாக சொல்லப்போனால் 'ஸ்பைடர்' ஏ.ஆர்.முருகதாஸ் பாணி சினிமாவாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x