Published : 31 Dec 2022 08:05 AM
Last Updated : 31 Dec 2022 08:05 AM

செம்பி: திரை விமர்சனம்

தனது பத்து வயது பேத்தி செம்பியுடன் (நிலா), கொடைக்கானல் மலைக்கிராமம் ஒன்றில் வசித்து வருகிறார் வீரத்தாய் (கோவை சரளா). காட்டுக்கு வரும் 3 வாலிபர்களால் செம்பி, கூட்டுப் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக, இந்தச் சம்பவம் தேர்தல் அரசியலிலும் எதிரொலிக்கிறது. விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரி, பாலியல் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கிறார். அரசியல் புள்ளியின் மகனும் அவன் நண்பர்களும் இந்தக் கொடூரத்தைச் செய்தவர்கள் என்பது தெரியவருகிறது. அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு வழக்கை வாபஸ் வாங்கச் சொல்கிறார், வீரத்தாயிடம். போலீஸ் அதிகாரியைத் தாக்கிவிட்டு பேத்தியுடன் தப்பிக்கும் அவர், குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்தாரா, இல்லையா என்பதுதான் படம்.

செல்வாக்குமிக்கக் குற்றவாளிகள் என்றாலும் பாதிக்கப்பட்டவர்களின் நியாயங்களுக்கு உதவ, ஓராயிரம் கைகள் ஓடோடி வரும் என்ற நம்பிக்கையையும் கேள்விக் கேட்க வேண்டிய நேரத்தில் அமைதி காப்பது ஆபத்தானது என்பதையும் ‘செம்பி’யின் மூலம் ஆழமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன்.

கேள்விபட்ட, தெரிந்த கதைதான் என்றாலும் காட்சி அமைப்பிலும் கதாபாத்திர வடிவமைப்பிலும் உருவாக்கத்திலும் ‘செம்பி’ கவனம் ஈர்க்கிறாள். அதற்கு, கொடைக்கானலின் குளிர்ச்சியை, மலைகளுக்கு நடுவே, நமக்கும் கடத்தி விடுகிற ஜீவனின் ஒளிப்பதிவும் கதையின் படபடப்போடு அழைத்துச் செல்லும் நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசையும் பலமாக உதவி இருக்கின்றன.

கோவை சரளாவுக்கு இது வாழ்நாள் படம். ஒரு நகைச்சுவை நடிகையை அசலான மலைகிராம பாட்டியாக மாற்றியிருக்கிறது, படக்குழுவின் உழைப்பு. அந்த கதாபாத்திரத்துக்குள் கச்சிதமாகத் தன்னைப் பொருத்திக் கொண்ட அவரின் உடல்மொழியையும் விருதுக்குத் தகுதியான நடிப்பையும் பாராட்டாமல் இருக்க முடியாது. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பேத்தியின் நிலை அறிந்து மருத்துவமனையில் அங்கும் இங்குமாக அவர் நடந்து கதறுவது, ஒரு சோறு பத காட்சி. ஒரு சிறந்த நடிகையை காமெடிக்குள் அடைத்து தமிழ் சினிமா குறுக்கிவிட்டதோ என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

அவருக்கு ஒப்பனை செய்த எம்.கே.ராஜூ காஷ்ட்யூம் டிசைனர் பிரியா ஆகியோரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். பேத்தியாக வரும் நிலாவும் நடிப்பில் ஆச்சரியப்படுத்துகிறார்.

அஸ்வின் குமாருக்கு, செம்பிக்கு உதவும் வழக்கறிஞர் பாத்திரம். கேரக்டரில் கொஞ்சம் மிகை நாயகத் தன்மை இருந்தாலும் இயல்பான நடிப்பையே வழங்கி இருக்கிறார். பேருந்து நடத்துநர் தம்பி ராமையா, அரசியல்வாதிகள் நாஞ்சில் சம்பத், பழ.கருப்பையா, நீதிபதிஞானசம்பந்தம், போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட துணை கதாபாத்திரங்கள் கதைக்கு வலு சேர்க்கின்றன. ‘உண்மையை புரிய வைக்க மொழி தேவையில்லை, வலி போதும்’ என்பது போன்றவசனங்கள் கவனிக்க வைக்கின்றன.

முதல் பாதியில் இழுத்துப் பிடித்துஅமர வைக்கிற திரைக்கதை இரண்டாம் பாதியில் கொஞ்சம் செயற்கையாகவே கடக்கிறது. வீரத்தாய் மற்றும்பேத்தியின் பின்னணி பற்றி ஏதுமில்லாமல் இருப்பது, பரபரப்பாக நடக்க வேண்டிய நீதிமன்ற காட்சிகள் அழுத்தமில்லாமல் முடிந்துபோவது போன்ற திரையாக்கக் குறைபாடுகள் பளிச்சென்று தெரிகின்றன. அன்பைப் போதிக்கும் படத்தில், அது பெரும்பானை சோற்றுக்குள் கிடக்கிற சிறு கல் போன்றதுதான் என்றாலும் அதைச் சரி செய்திருந்தால் ‘செம்பி’ இன்னும் உயர்ந்திருப்பாள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x