Last Updated : 01 Dec, 2016 06:13 PM

 

Published : 01 Dec 2016 06:13 PM
Last Updated : 01 Dec 2016 06:13 PM

முதல் பார்வை: சைத்தான் - ஏமாற்றவில்லை!

துரோகம் அறிந்து பழிவாங்கத் துடிக்கும் ஒருவனின் முன் ஜென்மக் கதை 'சைத்தான்'.

ஐடி ஊழியர் விஜய் ஆண்டனிக்கு திடீரென ஒரு நாள் மூளைக்குள் ஒரு குரல் ஒலிக்கிறது. அவரும் அந்த குரலுக்குக் கட்டுப்பட்டு நடக்கிறார். அதனால் சில விபரீதங்கள் நடக்கின்றன. அந்தக் குரலும் அதற்கான பின்னணியும் என்ன என்பதே திரைக்கதை முடிச்சு.

சைக்காலஜிக்கல் த்ரில்லர் படத்தை எடுத்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.

ஐடி ஊழியர், தமிழாசிரியர் என மாறுபட்ட இரு கதாபாத்திரங்களில் விஜய் ஆண்டனி நடித்திருக்கிறார். பயம், பதற்றம், குழப்பம், ஆக்ரோஷம், பழிவாங்கத் துடிக்கும் கோபம் என எல்லா உணர்வுகளையும் சரியாக வெளிப்படுத்துகிறார். உடல்மொழி, இறுக்கமான முகம் ஆகியவை கதைக்களத்துக்குத் தேவையானதாக இருப்பதால் அதிலும் குறைவைக்கவில்லை. தமிழாசிரியர் கதாபாத்திரத்திலும் சாந்தம், கருணை, மன்னிப்பு என கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கிறார். விஜய் ஆண்டனியின் தோள்களிலேயே கதை பயணிக்கிறது என்றாலும் அதை எந்த வித சிரமமும் இல்லாமல் மிகத் தெளிவாக கையாளுகிறார்.

அருந்ததி நாயர் கதாநாயகிக்கான பங்களிப்பை சரியாக வழங்கியிருக்கிறார். பின்னணிக் குரல் மட்டும் சூழலுக்குப் பொருந்தாமல் துருத்தி நிற்கிறது. கிட்டி, ஒய்.ஜி.மகேந்திரன், முருகதாஸ், மீரா கிருஷ்ணன் ஆகியோர் தத்தமது கதாபாத்திரங்களில் பொருந்திப் போகிறார்கள்.

பிரதீப் கலிபுரயாத் ஒளிப்பதிவும், விஜய் ஆண்டனியின் இசையும் படத்துக்குப் பெரும் பலம். நான் சுடச் சுட நனைகிறேன், ஏதேதோ ஏதேதோ ஆகிப் போச்சே பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. ஜெயலட்சுமி எனத் தொடங்கும் பாடலில் இசையைத் தெறிக்க விட்டிருக்கிறார் விஜய் ஆண்டனி.

சைக்காலஜிக்கல் த்ரில்லர் படத்துக்கான இயக்குநரின் மெனக்கெடலை முதல் பாதியில் பார்க்க முடிகிறது. ஆனால் இரண்டாம் பாதியில் சறுக்கி இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

விஜய் ஆண்டனியை ஏன் கோயிலுக்குள் இருந்து ஒருவர் அழைத்துச் செல்ல வேண்டும்?, குரலுக்கான பின்னணி தேடி தஞ்சை செல்லும் விஜய் ஆண்டனி திடீரென ஒரு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்வது எப்படி, இயல்பாக நகரும் திரைக்கதையில் ஏன் ஒரு வெளிநாட்டு கம்பெனிக்கு வேலை செய்யும் கும்பலின் மர்ம நடவடிக்கைகள், கதாநாயகிக்கான பாத்திர வடிவமைப்பு என்ன என்ற கேள்விகள் நீள்கின்றன.

இரண்டாம் பாதியில் விஜய் ஆண்டனி திருக்குறள் தெரியுமா என்று கேட்டு கதாபாத்திரத்தின் பெயர் சொல்லி கேட்கும்போது தியேட்டரில் சிரிப்பலையே மிஞ்சுகிறது. கதாபாத்திரத்தின் முக்கிய நோக்கம் அங்கு காமெடிப் பதராக மாறுவது அவலச் சுவை.

இதைத் தவிர்த்து முதல் பாதியில் சஸ்பென்ஸை நீட்டித்த விதமும், அதற்கான ஃபிளாஷ்பேக்கை விளக்கி அதை நிகழ்காலத்துடன் இணைத்த விதமும் பார்க்கையில் 'சைத்தான்' ஏமாற்றவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x