Published : 24 Dec 2022 07:38 AM
Last Updated : 24 Dec 2022 07:38 AM

எம்.ஜி.ஆர். ஏன் மக்கள் திலகம்? - கடந்த கால சுவாரசிய நினைவுகளில் மலர்கிறார் நடிகை லதா

1977-ல் முதல்முறை தமிழக முதல்வராக பதவியேற்றபோது மக்கள் திலகம் முன்னே மக்கள் கடல்.படம்: இந்து ஆவணக் காப்பகம்

எம்.ஜி.ஆர் நினைவு நாளை முன்னிட்டு ‘இந்து தமிழ் திசை’யிடம் தனது மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். ‘எம்.ஜி.ஆர் பற்றி....’ என்றதுமே சற்று உணர்ச்சிவசப்பட்டு சிறிதுநேரம் கண்களை மூடி சிந்தனையில் ஆழ்ந்த லதா, உற்சாகமாக ஆர்ப்பரித்துக் கொட்டிய குளுமையான நினைவுகளின் அருவி இதோ:

எனக்கு எம்.ஜி.ஆர்.தான் எல்லாமே.நடிக்க வந்தபோது நான் மிகவும் சிறியவள். வெளி உலகம் அதிகம் தெரியாது. எப்படி நடந்துகொள்ள வேண்டும். யாரிடம் எப்படி பேச வேண்டும், பண்பு, மரியாதை எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்து, கல்லாக இருந்த என்னை சிற்பமாகச் செதுக்கியவர் எம்.ஜி.ஆர்தான். எனது நிஜப் பெயர் நளினி. சினிமாவுக்காக ‘லதா’ என்று பெயர் வைத்ததே அவர்தான். என் வீட்டு பூஜையறையில் தெய்வங்கள், தாய், தந்தையுடன் எம்.ஜி.ஆர். படத்தையும் வைத்து தினமும் வணங்குகிறேன். (பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். படத்தைக் காட்டினார்).

‘உரிமைக்குரல்’ படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்துக் கொண்டிருந்தபோது, ஒருநாள் என் தாயாருடன் அதிகாலையில் திருப்பதி சென்று சுவாமியை தரிசித்தேன். மதியம் 2 மணிக்குள் படப்பிடிப்புக்குத் திரும்ப வேண்டும். வழியில் கார் பழுதானதால் சென்னை திரும்ப மாலை 6 மணியாகிவிட்டது. சரி, படப்பிடிப்புக்குத் தாமதமானதால் ஸ்ரீதரும் எம்.ஜி.ஆரும் திட்டப்போகிறார்கள் என்று பயந்துகொண்டே வீட்டுக்குள் நுழைந்தால் ஆச்சரியம்! பள்ளி முடித்து வீட்டுக்குதிரும்பிய என் தம்பி, தங்கைக்கு தனது வீட்டில் இருந்து பெரிய கேரியரில் டிபன், சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்து எம்.ஜி.ஆர். பரிமாறிக் கொண்டிருந்தார். என் தாயாரும் என்னுடன் வந்ததால் பள்ளிவிட்டு வீடு திரும்பும் பிள்ளைகளை யார் கவனித்துக் கொள்வார்கள்என்று அவர்களுக்கு சாப்பாடு கொண்டு வந்திருக்கிறார். களைப்போடு வீடுதிரும்பிய என்னையும் என் தாயாரையும் கார் டிரைவரையும் உட்கார வைத்து அவரே உணவு பரிமாறினார். எனக்கு அழுகையே வந்துவிட்டது.

1986-ம் ஆண்டு எனது தாயார் உடல் நலமில்லாமல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது, நான் சொல்லாதபோதும் விஷயத்தைத் தெரிந்துகொண்டு மருத்துவமனைக்கே எம்.ஜி.ஆர். வந்துவிட்டார். ‘ஏன் என்னிடம் சொல்லவில்லை?’ என்று உரிமையுடன் கோபித்துக் கொண்டவர், என் தாயாருக்குத் தேவையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யும்படியும் செலவுகளை தான் பார்த்துக் கொள்வதாகவும் மருத்துவமனை நிர்வாகிகளிடம் தெரிவித்தார். அப்படியும் சிகிச்சை பலனின்றி என் தாயார் மறைந்தார்.

குடும்பப் பொறுப்பு, நிர்வாகத்தை என் அம்மாதான் கவனித்துக் கொள்வார். அவர் மறைவதற்குமுன் எங்களுக்கு ஒரு வீடு கட்டிக் கொண்டிருந்தார். அந்த வீடு கட்டி முடிக்கும்முன்பே என் அம்மா மறைந்துவிட்டார். எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. எம்.ஜி.ஆர். வந்து விவரங்களை எல்லாம் கேட்டு கட்டிட ஒப்பந்ததாரரிடம் பேசி வீட்டைக் கட்டி முடிக்க ஏற்பாடு செய்து அதற்குப் பொருளாதார ரீதியாகவும் உதவினார்.

எனக்கு மட்டும்தான் என்று இல்லை. எல்லாரிடமும் எம்.ஜி.ஆர்.அன்பாகப் பழகுவார். எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும்என்று நினைப்பார். திரைப்படத்தில் கூடதன்னுடன் நடிப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்று உறுதியாக இருப்பார். ‘சந்திரோதயம்’ திரைப்படத்தில், ‘புத்தன் ஏசுகாந்தி பிறந்தது பூமியில்எதற்காக..?’ என்ற பாடலில் கையில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு எம்.ஜி.ஆர். வருவார். அவருடன் மேலும் பல குழந்தைகளும் முதியவர்கள் நடந்து வருவார்கள். மழை கொட்டும். குளிர்ந்த நீரில் பலமணி நேரம் நனைந்து குழந்தைகளும் முதியவர்களும் சளி, காய்ச்சலால் பாதிக்கப்படக் கூடாது என்று சொல்லிசெயற்கை மழையை குளிர்ந்த நீருக்குப் பதில் வெதுவெதுப்பான வெந்நீராக எம்.ஜி.ஆர். மாற்றச் சொன்னார்.

இத்தனைக்கும் எம்.ஜி.ஆர். பலபடங்களில் குளிர்ந்த நீரில் மழைக்காட்சிகளில் நடித்திருக்கிறார். 1977-ல்‘மீனவ நண்பன்’ படத்தில் கூட‘கிளைமாக்ஸ்’ காட்சியில் நம்பியாருடன் மோட்டார் படகில் குளிர்ந்த நீரில் மழையில் சண்டைக் காட்சியில் நடித்துக் கொடுத்து விட்டுதான்தமிழக முதல்வராகப் பதவியேற்றார். இருந்தாலும் குழந்தைகள்,முதியோர்கள் பாதிக்கக் கூடாதுஎன்று ‘சந்திரோதயம்’ படத்தில் வெந்நீர் மழைக்கு ஏற்பாடு செய்தார்.

நான் எத்தனையோ நடிகர்களுடன்நடித்திருக்கிறேன். இயக்குநர் சொன்னதை எவ்வளவு கடினமானகாட்சியாக இருந்தாலும் நடிகர்கள் செய்வார்கள். அதற்காக சிரமம் எடுத்துக் கொள்வார்கள்.இதெல்லாம் அவர்கள் வாங்கும்ஊதியத்திற்கான உழைப்பு, நடிப்பின் மீது உள்ள அக்கறை, தொழில்பக்தி. அதற்காக அவர்களைப் பாராட்டலாம்தான். ஆனால், அதற்கெல்லாம் மேலாக உடன் நடிப்பவர்கள் நலன் பற்றியும் சிந்தித்து தன்னைச் சுற்றியிருப்பவர்கள், பொதுமக்கள் எல்லார் மீதும் அன்பு காட்டி எல்லாருக்கும் நன்மையே செய்ததால்தான் எம்.ஜி.ஆர். மக்கள் திலகம்!

‘எனக்கு நீ கொடுக்கிறியா?’

‘‘அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள், சத்தியவாணி முத்துவுக்குப் பின் நான் 3-வது பெண் உறுப்பினர். 1977-ல் முதல் சட்டப்பேரவை பொதுத் தேர்தலை சந்திக்கும் நேரம். கட்சியில் பணம் இல்லை. ‘சாகுந்தலம்’ என்ற நாட்டிய நாடகத்தைத் தயார் செய்து தமிழகத் தின் பல ஊர்களில் நடத்தி அதன் மூலம் வசூலான ரூ.35 லட்சத்தை எம்.ஜி.ஆரிடம் கொடுத்தேன். 45 ஆண்டுகளுக்கு முன் ரூ.35 லட்சம் என்பது இன்றைய மதிப்பில் பல கோடிக்கு சமம். ‘எல்லாருக்கும் நான் கொடுக்கிறேன். எனக்கு நீ கொடுக்கிறியா?’ என்று எம்.ஜி.ஆர். கிண்டல் செய்ததை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும்’’ என்று மகிழ்கிறார் லதா!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x