

பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் லார்ட் வேவர்லி, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனை அவரது இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினார்.
இது குறித்து கமல் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: உலகளாவிய கலாசாரத்தை உலகெங்கும் பறைசாற்றுவதிலும் சக வாழ்வினை மேம்படுத்துவதிலும் சினிமாவின் பங்கினைக் குறித்து இருவரும் விவாதித்தனர் .
சமீபகாலமாக ஊடகத்துறையில் ஏற்பட்டுள்ள புதிய முன்னேற்றங்கள் குறித்தும், அரசியல், இலக்கியம், சினிமாவில் முதலீடு, தமிழகத்தின் கலாசாரம், பாரம்பரியம் போன்றவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதன் முக்கியத்துவம் குறித்தும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டது.
சந்திப்புக்கு குறித்து லார்ட் வேவர்லீ, ''கமல்ஹாசனை பொறுத்தவரை இந்தியா மற்றும் தமிழ்நாடு குறித்து ஆழ்ந்த கருத்துகளைக் கொண்டிருப்பவர். மேலும், உலகில் உள்ள தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் நல்வாழ்வு குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டவர். உள்நாடு, வெளிநாடு என உலகெங்கும் உள்ள சிக்கல்களை எத்தகைய சூட்சுமத்தோடு அணுக வேண்டும் என்பது குறித்தும், அவற்றை எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்தும் கருத்துகளை பரிமாறிக்கொண்டோம்'' என்றார்.
சந்திப்பு குறித்து பேசிய கமல், ''நம்முடைய மக்கள் குறித்தும் அவர்களின் வளர்ச்சி குறித்தும் உலகத் தலைவர்களுடன் விவாதிப்பதிலும் , அவர்களுடன் கருத்துகளை பரிமாறிக் கொள்வதிலும் எனக்கு எப்போதும் பெருமை உண்டு. லார்ட் வேவர்லீ என்னை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி” என்று கூறினார்.