Last Updated : 07 Oct, 2016 06:08 PM

 

Published : 07 Oct 2016 06:08 PM
Last Updated : 07 Oct 2016 06:08 PM

முதல் பார்வை: ரெமோ - சிரிப்புக் காதலன்

நாடக நடிகனின் கெட்டப் மாற்றம் தரும் காதல் வாய்ப்பும், சினிமா வாய்ப்புமே 'ரெமொ'.

நாடகத்தில் நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் பெரிய ஹீரோ ஆகவேண்டுமென்று விரும்புகிறார். சினிமா ஆடிஷனில் தன் திறமையை நிரூபிக்க நினைப்பவருக்கு சறுக்கல் ஏற்படுகிறது. எப்படியாவது இயக்குநரைக் கவர வேண்டும் என்று பெண் கெட்டப் போடுகிறார். அந்த கெட்டப் ஏன்? அதனால் என்ன ஆனது? காதல் பூத்த தருணம் எது? சிவகார்த்திகேயனின் முயற்சிகளுக்கு விடை கிடைத்ததா என்ற கேள்விகளின் பதில்களே திரைக்கதை.

நிச்சயிக்கப்பட்ட பெண்ணைக் காதலிக்கும் வழக்கமான தமிழ் சினிமா கதைதான். அதில் காமெடி, எமோஷன் என்று கலந்துகட்டி கொடுத்த விதத்தில் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் கவனிக்க வைக்கிறார்.

லவ்வர் பாய், நர்ஸ் என இரு வேறு கெட்டப்களில் சிவகார்த்திகேயன் சரியாகப் பொருந்துகிறார். நர்ஸ் வேடத்தில் அந்த நெற்றி முடியை ஊதி ஸ்டைல் காட்டுவது சுவாரஸ்யம். காதலிக்க திட்டமிடுவது, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு காதலியிடம் பேசுவது, அம்மாவிடம் காதலிக்காக கெஞ்சுவது என வழக்கமான சிவாவைப் பார்க்க முடிகிறது.

காமெடி, மிமிக்ரி, இமிடேட் செய்தல், கவுன்டர் கொடுத்தல், நன்றாக நடனம் ஆடுதல் என்று சிவாவின் திறமைகள் படத்துக்குப் பயன்படுகின்றன. ஆனால், அந்த கதாபாத்திரத்துக்கு அதுமட்டும் போதவில்லை. சிவகார்த்திகேயன் ஒரு காதலனாக மனதில் பதியவில்லை. கண்களில் எந்த ஜீவனும், காதலும் இல்லாமல் வெறுமனே சிவாவின் உதடுகள் மட்டுமே காதல் வசனம் பேசுகின்றன. கீர்த்தி சுரேஷிடம் புரபோஸ் செய்யும் அந்தக் காட்சியில் எந்த ஈர்ப்பும் வரவில்லை.

''காதலிக்கிற பொண்ணு கிடைக்கணும்னு முயற்சி பண்ணாதவன், அந்த பொண்ணு கிடைக்கலைன்னு வருத்தப்படறதுக்கு தகுதியே இல்லாதவன்'' என வசனம் பேசும் சிவகார்த்திகேயன், ''என்னை மாதிரி சாதாரண பசங்களுக்கெல்லாம் எல்லா வாய்ப்பும் கிடைக்காது காவ்யா...நாங்கதான் ஏற்படுத்திக்கணும்'' என தொண்டை வலிக்கப் பேசுவது இன்னும் எத்தனை படங்களுக்கு நீடிக்கும்?

கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரத்துக்கான பங்களிப்பை நிறைவாக வழங்கியிருக்கிறார். எமோஷன் காட்சிகள், காதல் காட்சிகளில் நன்றாக ஸ்கோர் செய்கிறார்.

''பசங்களை அழ வைக்குறதுதான் பொண்ணுங்களோட ஃபுல்டைம் ஜாப்''. ''மேய்க்கிறது எருமை அதுல என்ன பெருமை'' சதீஷின் ஒன் லைனர் வசனங்களுக்கு தியேட்டரில் கைதட்டல்கள் பலமாக விழுகின்றன.''கேப் விட்டுப் பேசு. புரியமாட்டேங்குது'' என 'நான் கடவுள்' ராஜேந்திரனை கலாய்த்துப் பேசும் போது தியேட்டர் அதிர்கிறது.

பையனின் காதல் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தன்னையே பைத்தியம் என்று சொல்லிக்கொள்ளும் வழக்கமான அப்பாவி அம்மா கேரக்டரில் நடித்திருக்கும் சரண்யா பொன்வண்ணன், நர்ஸைக் காதலிக்கும் யோகி பாபு, கீர்த்தி சுரேஷ் பெற்றோராக வரும் நரேன் - கல்யாணி நட்ராஜன், இயக்குநராகவே வரும் கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.

பி.சி.ஸ்ரீராம் சென்னையின் பல்வேறு இடங்களை அழகியலுடன் கேமராவில் கடத்தி இருக்கிறார். ஃபிரேம் வைத்திருக்கும் விதம் அபாரம். அனிருத்தின் இசையில் ரெமோ, சிரிக்காதே பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசை காட்சிகளுக்கு ஒத்திசைவாக பொருந்திப் போகிறது.

ரூபன், 'காவ்யா' பாடலை யோசனையே செய்யாமல் கத்தரி போட்டிருக்கலாம். ரசூல் பூக்குட்டியின் ஒலி வடிவமைப்பு காதலன் சிவா, நர்ஸ் சிவா குரல்களை நேர்த்தியாக வேறுபடுத்திக் காட்டுகிறது.

''இந்த உலகத்துலயே கலப்படம் இல்லாதது பசங்க மனசு.'', ''எல்லாப்பசங்களையும் குத்தம் சொல்லாதீங்க.லவ்வுக்காக உயிரைக்கொடுக்கற பசங்களும் இருக்காங்க. உயிரைக்கொடுத்து லவ் பண்ற பசங்களும் இருக்காங்க'' என்ற வசனங்கள் ஆண்களை உயர்த்திப் பிடிக்கின்றன.

''பொண்ணுங்களை கன்ட்ரோல் பண்றதுதான் கஷ்டம். கன்ஃபியூஸ் பண்றது ஈஸி.'', '' ஆம்பளைங்க அழக்கூடாதுதான். ஆனா, அவங்களை அழ வைக்கக்கூடாதுன்னு பொண்ணுங்ககிட்ட சொல்லுங்க'', ''பார்த்தா லூஸு மாதிரி தெரியலை. ஆனா, பேசினா தெரியுது'' என பெண்களை நோக்கி வீசப்படும் வசன அம்புகளுக்கு கடும் கண்டனங்கள்.

கதையில் பெரிதாக மெனக்கெடாத இயக்குநர் திரைக்கதையில் நகைச்சுவையை ஆங்காங்கே தூவி ரசிகர்களை சிரிக்க வைத்துவிடுகிறார். ஆனால், காதல் படத்துகான ஆதாரம் எதுவும் ரெமோவில் பலமாக இல்லை என்பதால் வலுவிழக்கிறது. நடிகன் ஆக நினைக்கும் சிவா கெட்டப் மாற்றத்துக்குப் பிறகு அதற்கான எந்த முயற்சியிலும் இறங்காமல், காதலை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்படுகிறார். அதிலும் காதல் வருவதற்கான காரணங்களோ, பின்புலமோ, காதலிப்பதற்கான வலுவான அம்சங்களையோ காட்சிப்படுத்தவில்லை.

கீர்த்தி சுரேஷின் பாத்திர வடிவமைப்பில் நம்பகத்தன்மை இல்லை. எதைப் பற்றியும் யோசிக்காமல், பல நாட்கள் ஆன பிறகும் பெயர் கூட தெரியாமல் காதலில் விழுவதாகக் காட்சிப்படுத்தி இருப்பது நம்பும்படி இல்லை. வேலையே இல்லாத நர்ஸ், பிறகு ஸ்கூட்டியில் வருகிறார். ஆனால், ஒரு டாக்டர் எப்போதும் பேருந்திலேயே பயணிக்கிறார்.

நர்ஸ் வேலையே செய்யத் தெரியாமல் ஓ.பி. அடிப்பது இன்னொரு நர்ஸுக்குத் தெரிந்த பின்னும், அதே வேலையில் அந்த நர்ஸ் எப்படி தொடர்ந்து இருக்க முடியும்?

எந்த காரணமும் இல்லாமல் ஒரு நர்ஸ் சொல்வதை எப்படி ஒரு டாக்டர் எப்படி பரிபூரணமாக கேட்டுக்கொண்டு ஆமாம் சாமியாக செயல்படுவார்? சுய சிந்தனையே இல்லாமல் ஒரு டாக்டர் இயங்குவதாகக் காட்டியிருப்பதும் நம்பமுடியவில்லை...இல்லை...

மொத்தத்தில் சிரிப்புக்கு மட்டுமே உத்தரவாதம் தருவதால் 'ரெமோ' சிரிப்புக் காதலன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x