Last Updated : 02 Oct, 2016 02:47 PM

 

Published : 02 Oct 2016 02:47 PM
Last Updated : 02 Oct 2016 02:47 PM

மாவீரன் கிட்டு படத்துக்காக தேசிய விருது கிடைக்கும்: சுசீந்திரன் நம்பிக்கை

'மாவீரன் கிட்டு' படத்துக்காக எனக்கு தேசிய விருது கிடைக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன் என்று இயக்குநர் சுசீந்திரன் குறிப்பிட்டார்.

விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, பார்த்திபன், சூரி, ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிக்க சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'மாவீரன் கிட்டு'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு காசி விஸ்வநாதன் எடிட்டிங் பணிகள் கவனித்து வருகிறார். சந்திரசாமி, தாய் சரவணன் மற்றும் ராஜீவன் மூவரும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியீட்டு விழா லயோலா கல்லூரியில் நடைபெற்றது. 'மாவீரன் கிட்டு' பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமுத்திரகனி வெளியிட, டீஸரை இயக்குநர் ரஞ்சித் வெளியிட்டார்.

இவ்விழாவில் சுசீந்திரன் பேசியது, "நான் இயக்கி , தயாரித்த 2 திரைப்படங்களின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர்களை இங்கு தான் வெளியிட்டேன். அதை தொடர்ந்து இப்போது மீண்டும் நான் தயாரித்து இயக்கியுள்ள 'மாவீரன் கிட்டு' படத்தின் டீஸரை இங்கு வைத்து வெளியிடுகிறேன்.

எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஏனென்றால் எனக்கு லயோலா கல்லூரி மிகவும் பிடித்த இடம். முதலில் என்னுடைய தந்தைக்கு நன்றி கூற வேண்டும் ஏனென்றால் அவர் மூலமாக தான் இப்படத்தின் தயாரிப்பாளர் சந்திரசாமி எனக்கு நண்பரானார். 'அழகர்சாமியின் குதிரை' படத்துக்காக எனக்கு தேசிய விருது கிடைத்தது. அதே போல் 'மாவீரன் கிட்டு' படத்துக்காக எனக்கு தேசிய விருது கிடைக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

இயக்குநர் பா.ரஞ்சித் பேசும் போது, "இப்படத்தின் டீஸரை பார்க்கும் போது சமூகத்துக்கு தேவையான முக்கியமான ஒரு படைப்பை இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ளார் என்பது தெரிகிறது. இல்லாதவர்கள் ஒரு விஷயத்துக்காக போராடும் போது தான் அது புரட்சியாக மாறுகிறது. இப்படத்தை பார்க்கும் போது நாயகன் ஏதோ ஒரு முக்கிய சமூக பிரச்சனைக்காக போராடுவது போல் தோன்றுகிறது" என்று தெரிவித்தார்.

'மாவீரன் கிட்டு' படத்தின் பர்ஸ்ட் லுக் டீஸர்