Published : 14 Apr 2020 09:47 PM
Last Updated : 14 Apr 2020 09:47 PM

அலைபாயுதே, அஜித், ஷாலினி, மணிரத்னம், காதல், சாக்லேட் பாய் இமேஜ்: மாதவன் சிறப்புப் பகிர்வு 

இன்றுடன் (ஏப்ரல் 14) 'அலைபாயுதே' வெளியாகி 20 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன. ஆனால், இப்போதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மணிரத்னம் - மாதவன் - ஷாலினி மூவரின் முக்கியமான படங்களில் பட்டியலில் கண்டிப்பாக 'அலைபாயுதே' இல்லாமல் சொல்லவே முடியாது. இன்று காலை முதலே சமூக வலைதளத்தில் 'அலைபாயுதே' குறித்த நினைவுகளைப் பலரும் தட்டிவிட, நானோ நாயகன் மாதவனுக்கு மெசேஜைத் தட்டினேன். பேட்டியா.. பண்ணலாமே ப்ரோ என்றார் சிரித்துக் கொண்டே.. அவருடனான ஒரு நீளமான பேட்டி இதோ..

'அலைபாயுதே'வுக்கு கல்ட் கிளாஸிக் ஆக கிடைத்தது எதனால் என்று நினைக்கிறீர்கள்?

அதற்கு மிக முக்கியக் காரணம் அப்போது உலகம் மாறிக் கொண்டிருந்தது. சாப்ட்வேர்கள் வந்து கொண்டிருந்தன. மணி சார் ஒரு புதிய உலகத்தை உருவாக்கியிருந்தார். அது நம்பத்தகுந்ததாக இருந்தது. அற்புதமான விஷயங்களை அந்தப் படத்தில் அவர் செய்திருந்தார். அப்படம் உருவாக்கிய காரணி மிகவும் அசலானதாக இருந்தது. இதுதான் அப்படம் ஒரு கல்ட் கிளாசிக்காக மாறிப்போனதற்காக காரணமாக நான் நினைக்கிறேன்.

முதல் படமே மணிரத்னம் இயக்கத்தில் என்னும் போது உங்களுடைய எதிர்பார்ப்பு என்னவாக இருந்தது? படப்பிடிப்புத் தளத்தில் பதற்றத்தை உணர்ந்தீர்களா?

அது ஒரு கனவு போல இருந்தது. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன், கற்பனையில் மிதந்தேன் என்றெல்லாம் சொல்லமாட்டேன். ஆனால் மிகவும் பதற்றமாக இருந்தது. வாழ்க்கை மிகவும் எளிமையானதாக மாறிவிட்டது என்றே சொல்வேன். அவர் என்னை ஏற்றுக்கொண்டது மட்டுமே என் நினைவில் இருந்தது. ஏனென்றால் அந்தப் படத்தில் என்னைத் தவிர மற்ற அனைவருமே சூப்பர்ஸ்டார்கள். மணி சார், ஷாலினி, பி.சி.ஸ்ரீராம், ஏ.ஆர்.ரஹ்மான் என அனைவருமே. இந்தப் படம் சரியாக வரவில்லையென்றால் அதற்கு குற்றம் சொல்லப்பட்டிருக்க வேண்டிய கடைசி ஆள் நானாக்கத்தான் இருந்திருப்பேன்.

'அலைபாயுதே' படத்தில் நீங்கள் அதிகமான டேக் வாங்கியது எந்தக் காட்சிக்கு என்று நினைவிருக்கிறதா?

ஷாலினியை மெடிக்கல் கேம்ப்பில் சென்று சந்திக்கும் காட்சிதான் மிகவும் கஷ்டமானதாக இருந்தது என்று நினைக்கிறேன். அப்போது கல்யாணம் செய்துகொள்ளலாம் என்று ஷாலினி சொல்வார். அந்தக் காட்சி எனக்கு க்ளைமாக்ஸ் போல இருந்தது. ஒருவழியாக மணி சார் அந்தக் காட்சியில் சிறிது மாற்றம் செய்தார். அங்கு பெய்த மழை, காற்று, திரண்டிருந்த மக்கள் இதெல்லாம் கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என நினைக்கிறேன்.

படத்தின் முதல் காட்சியே நீங்கள் பைக்கில் பாடல் கேட்டுக் கொண்டு வருவதுதான். இப்போது அந்தக் காட்சி கொண்டாடப்பட்டு வருகிறது. உங்களுக்கு அதன் படப்பிடிப்புத் தளம் ஞாபகம் இருக்கிறதா? என்ன பாடல் கேட்டீர்கள்?

எனக்கு அந்தக் காட்சி நன்றாக நினைவிருக்கிறது. ஏனென்றால் அந்தக் காட்சியை ஒளிப்பதிவு செய்தது பி.சி.ஸ்ரீராம் சார். அவர் ஒரு மாருதி ஆம்னி காரின் பின்புறம் அமர்ந்து கொண்டு வந்தார். அந்தக் காட்சி சென்னையின் தெருக்களில் படமாக்கப்பட்டது. அப்போது மக்கள் அதை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அப்போது என்னை யாருக்கும் தெரியாது. எப்படி ஓடும் வாகனத்தில் அவ்வளவு க்ளோசப்பில் ஷாட் வைத்தார் என்று தெரியவில்லை. ஹெட்போன்கள் எதிலும் கனெக்ட் செய்யப்படவில்லை. எனவே நான் எதையும் கேட்டுக் கொண்டு வரவில்லை. மணி சார் காரில் அமர்ந்து கொண்டே எனக்கு இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்துக் கொண்டே வந்தார். அப்போது ஒரு இடத்தில் நானாக லேசாகச் சிரித்தேன். உடனே மணி சார் நீ விரும்பினால் அப்படியே சிரித்துக் கொண்டிரு. ஆனால் அதிகமாகச் சிரித்து விட வேண்டாம் என்றார். மணி சார் ஒரு ஜீனியஸ். ஒருவரிடமிருந்து எப்படி வேலை வாங்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். அவர் சொல்வதை சரியாகச் செய்யவேண்டுமே என்பதே எனக்கு சவாலாக இருந்தது.

'அலைபாயுதே' தொடர்பாக இதுவரை நீங்கள் யாருடன் ஷேர் பண்ணாத சீக்ரெட் என்ன?

என்னை மற்ற நடிகர்களை விட வித்தியாசமாகவே மணி சார் ட்ரீட் செய்தார். மணி சார் எந்த நடிகரையும் எடிட் ரூமுக்குள் விடமாட்டார் என்று சொல்வார்கள். ஆனால் என்னை சினிமாவின் அத்தனை அம்சங்களையும் தெரிந்துகொண்டு ஈடுபட அனுமதித்தார். அதை என்னிடம் எப்போதும் வலியுறுத்திக் கொண்டே இருப்பார். இதை ஏன் என்னிடம் சொல்கிறார். நான் நடித்துவிட்டுப் போகிறேனே என்று நினைப்பேன். அந்த இளம் வயதில், அதுவும் முதல் படத்திலேயே எனக்கு சினிமாவைப் பற்றிய அவ்வளவு விஷயங்களை கற்றுக் கொடுத்தமைக்கு அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அதுதான் என்னை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

மணிரத்னம் உடனான நட்பு படத்தின்போதும், இப்போதும் எப்படி இருக்கிறது?

இப்போதும் கூட அவரை என்னால் மணி என்று கூப்பிட இயலாது. அவருடைய பல நடிகர்கள் அவரை மணி என்று அழைக்கிறார்கள். ஆனால் எனக்கு அவர் எப்போதும் மணி சார்தான். அவரும் நானும் நெருங்கி ஒரே குடும்பத்தினர் போல நெருங்கிப் பழகினாலும், அவர் வீட்டில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் என் குடும்பத்தை அழைத்தாலும் அவர்தான் எனக்கு குரு என்பதை மாற்றமுடியாது.

ரயில்வே ஸ்டேஷனில் நீங்கள் ஷாலினியிடம் பேசும் வசனம் இப்போதும் கொண்டாடப்படுகிறது. அவருடனான நட்பு இப்போது தொடர்கிறதா? அஜித் எப்போதாவது 'அலைபாயுதே' தொடர்பாக பேசியிருக்கிறாரா?

நானும் ஷாலினியும் சிறந்த நண்பர்கள். அந்த ரயில் காட்சியில் உனக்கு பதில் அஜித் நடித்திருக்க வேண்டும் என்று ஷாலினியும் உனக்கு பதில் சரிதா நடித்திருக்க வேண்டும் என்று நானும் சொல்லிக்கொள்வோம். நாங்கள் எங்கள் பார்ட்னர்களை நினைத்து நடித்ததுதான் அந்தக் காட்சிகள் உண்மையாக இருந்ததற்கான காரணம் என்று நான் நினைக்கிறேன். அஜித் எனக்கு சிறந்த நண்பர். சிறந்த மனிதர். இடையில் ஒரு காலகட்டத்தில் நான் உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டிருந்தேன். அப்போது நானும் அஜித்தும் விமானங்கள், கார்கள் என எங்களுக்குப் பிடித்த பொதுவான விஷயங்களைப் பற்றி பகிர்ந்து கொள்வோம். சென்னையில் என்னுடைய ஆரம்பகாலத்தில் அஜித் எனக்கு மிகவும் உதவினார். சினிமாத்துறையை பற்றிய பல விஷயங்களை எனக்கு சொல்வார். அஜித்தும் ஷாலினியும் எவ்வளவு சிறந்த தம்பதியாக இருக்கிறார்கள் என்று யோசிப்பேன்.

படத்தின் கடைசியில் அரவிந்த் சாமியுடன் சில காட்சிகள் இருக்கும்.. அப்போது அவருடன் நடித்தது எப்படி இருந்தது என்று ஞாபகம் இருக்கிறதா? இன்றும் அவரோட நட்புடன் இருக்கிறீர்களா?

எனக்கு அது ஒரு கனவு. நான் அவரது மிகப்பெரிய ரசிகன். 'ரோஜா', 'பம்பாய்'க்கு பிறகு அவர்தான் எல்லாருக்கும் டார்லிங். என்னைப் பொறுத்தவரை அவரைச் சந்திப்பதே பெரிய விஷயமாக இருந்தது. அவரைப் பார்த்தபோது என்னை விட இளையவராக இருப்பாரோ என்று நினைத்து அதிர்ந்துவிட்டேன். அவ்வளவு பேரிடம் ஒரு குழந்தையைப் போல நடந்து கொண்டிருந்தார். ஒரு நாள் இரவு ஷூட்டிங் முடிந்ததும் என்னை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். எனக்கு ஆம்லெட் செய்து கொடுத்தார். சாப்பிட்டு விட்டு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அதன்பிறகு இருவரும் சேர்ந்து பணியாற்ற விரும்பினோம். ஆனால் அதற்கான சூழல் அமையவில்லை. இப்போதும் அவருக்கு நான் ரசிகன்தான்.

'அலைபாயுதே' இந்தி ரீமேக்கான 'சத்யா' உங்களுக்குப் பிடித்திருந்ததா?

எனக்கு அந்தப் படம் பிடிக்கவில்லை. ஏனெனில் என்னையும் ஷாலினியையும் விட அவர்கள் சிறப்பாக நடித்தார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. ஷாத் அலி இந்திக்கு என்னை யோசிக்கவில்லை என்று எனக்கு அப்செட் ஆக இருந்தது. ஆனால் ஒவ்வொரு இயக்குநருக்கும் அவர் படத்தில் என்ன இருக்கவேண்டும் என்று முடிவு செய்ய உரிமை இருக்கிறது. அப்போதும் ராணி முகர்ஜியும் விவேக் ஓபராயும் கூட வளர்ந்து வரும் நடிகர்களாக இருந்தார்கள். ஆனால் எனக்கு அப்படம் பிடிக்கவேண்டும் என்று நான் விரும்பவில்லை. மன்னிக்கவும் நான் சற்று பொறாமை மிகுந்த மனிதன்.

மணிரத்னம் ரசிகர்கள் பலரும் 'ஒகே கண்மணி' படத்தை தற்கால 'அலைபாயுதே' என்றார்கள். உங்கள் கருத்து என்ன?

'மெளன ராகம்' மற்றும் 'அலைபாயுதே'வின் சில அம்சங்கள் 'ஓகே கண்மணி'யில் இருந்தன. என்னுடைய கருத்து என்னவென்றால் 'ஓகே கண்மணி' மிகவும் நவீனமான கதைக்களம் கொண்ட, தற்கால உலகத்துக்கு ஏற்ற ஒரு படம். 'அலைபாயுதே'வில் இருந்த துள்ளல் அவருடைய மற்ற எந்த படத்திலும் நான் காணவில்லை. நான் ஏற்கெனவே சொன்னது போல நான் பொறாமை மிகுந்த மனிதன். 'அலைபாயுதே'தான் எக்காலத்துக்குமான சிறந்த காதல் படம். அதன் பிறகு 'மௌன ராகம்'.

80’s, 90's, 2k கிட்ஸ் கடந்து வந்துள்ளீர்கள். நிஜ வாழ்க்கையில் காதலிக்கும் முறையில் என்ன மாற்றம் இருப்பதாக உணர்கிறீர்கள்?

4 தலைமுறை இளைஞர்களைக் கண்டவன் என்ற முறையிலும் அவர்களுடம் ரொமான்டிக்கான ரீதியில் தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது என்ற முறையிலும் நான் அதிர்ஷ்டம் செய்தவன். ஒவ்வொரு தலைமுறையிலும் ரிலேஷன்ஷிப்கள் மாறுகின்றன. ஆனால் காதலில் கருப்பொருள் என்றும் மாறாது என்றே நினைக்கிறேன். பெண்களைப் பின் தொடர்வது, காதலிக்கச் சொல்லி வற்புத்துவது உள்ளிட்டவற்றை மக்கள் குற்றம் சொல்வதைப் பார்க்கிறேன். அதை தவறு என்று நாம் இப்போது ஏற்றுக் கொள்கிறோம். மேற்கத்திய உலகத்தில் இளைஞர்களும் இளம்பெண்களும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. இங்கேயே கிராமங்களில் திருவிழாக்களில் அப்படியான வாய்ப்புகள் கிடைக்கும். அதன் மூலம் ஒருவரை ஒருவர் விரும்பி காதல் வயப்பட சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் இங்கே நகரங்களில் அப்படி ஒரு பெண்ணிடம் காதல் வயப்பட எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஒரு பெண் நம்மை காதலிக்கிறாளா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள அவர்களுக்கு வேறு வழி கிடைக்கவில்லை. நான் ஸ்டாக்கிங்கை ஆதரிக்கிறேன் என்று நினைக்கவேண்டாம். ஆனால் அந்த பாவப்பட்ட இளைஞர்கள் வேறு என்னதான் செய்திருக்க முடியும்? எல்லா இளைஞர்களும் தவறான நோக்கத்தில் பின் தொடர்கிறார்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

இப்போதுவரை 'சாக்லேட் பாய்' என்ற இமேஜ் உங்களுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறதே? 'இறுதிச்சுற்று', 'விக்ரம் வேதா' வந்த பிறகு, இந்த இமேஜை எப்படிப் பார்க்கிறீர்கள்?

சாக்லேட் பாய் இமேஜ் நீண்டகாலமாக என்னோடு இருந்தது. அதை நான் 'ஆயுத எழுத்து', 'விக்ரம் வேதா', 'இறுதிச் சுற்று' படங்களின் மூலம் மாற்ற முயற்சித்தேன். ஆனால் அது எந்த அளவு வெற்றி பெற்றது எனக்குத் தெரியவில்லை. அதை நீங்கள் தான் எனக்கு சொல்லவேண்டும்.

நடிகராக அறிமுகமாகி திரைக்கதை, வசனத்தில் பங்களிப்பு வரை வளர்ந்திருக்கிறீர்கள்.. இப்போது மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும்போது என்ன வித்தியாசமாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

அவர் எப்போதும் கருத்துகளை வரவேற்பவர். முதல் படத்திலேயே அவரிடம் நான் என்னுடைய கருத்துகளைச் சொல்வேன். முதல் படத்திலிருந்தே சினிமாவின் எல்லா துறைகளிலும் ஈடுபடவேண்டும் என்று அவர் என்னை ஊக்கப்படுத்தி வருகிறார். அது எனக்கு ஒரு மிகப்பெரிய பாடம்.

'அலைபாயுதே' படத்துக்குப் பிறகு நிறையப் பேர் வீட்டை விட்டு ஓடிச் சென்று திருமணம் செய்ததாக வந்த குற்றச்சாட்டைக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

என்னுடைய எல்லா படங்களிலிருந்தும் ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றை கற்றுக் கொள்கிறார்கள் என்றே நினைக்கிறேன். சில படங்களில் அநீதிக்கு எதிராகத் துணிந்து சண்டையிடுவேன். ஆபத்தில் இருக்கும் பெண்ணைக் காப்பாற்ற கெட்டவர்களை அடிப்பேன். எனவே ஒரு படத்திலிருந்து மட்டுமே அவர்களுக்கு தேவையானதை எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறேன். எனவே 'அலைபாயுதேவு'க்கு பிறகு வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்வது அதிகரித்துள்ளது என்று சொல்வது உண்மை என்று எனக்கு தோன்றவில்லை. மக்களுக்கு நாம் பாடம் கற்பிக்க வேண்டியதில்லை. என்ன செய்யவேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x