Published : 14 Apr 2020 05:59 PM
Last Updated : 14 Apr 2020 05:59 PM

தூய்மைப் பணியாளர்களுக்கு லாரன்ஸ் 25 லட்ச ரூபாய் நிதியுதவி

கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் காலத்திலும் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு லாரன்ஸ் 25 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், மே 3-ம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சரிசெய்ய பி.எம். கேர்ஸ் நிதி, முதல்வர் நிவாரண நிதி ஆகியவற்றுக்கு நிதியுதவி வழங்கி வருகிறார்கள்.

சில தினங்களுக்கு முன்பு 'சந்திரமுகி 2' படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவித்த லாரன்ஸ், அதற்காக வாங்கிய அட்வான்ஸ் தொகையில் கரோனா நிவாரண நிதிக்காக 3 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து மீண்டும் நிதியுதவி அளிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே, ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கவுள்ள வேறொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் லாரன்ஸ். அந்தச் சம்பளத்திலிருந்து தூய்மைப் பணியாளர்களுக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

இது தொடர்பாக ஃபைவ் ஸ்டார் கதிரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"இன்று தமிழ்ப் புத்தாண்டு, நாம் ‌அனைவரும் வீட்டில்‌ இருக்கிறோம்‌. இந்தத் தருணத்தில் மருத்துவர்களாக, செவிலியர்களாக, காவலர்களாக, தூய்மைப் பணியாளர்களாக, நமக்காகப் பணிபுரிந்து கொண்டிருக்கும் மனித உருவில்‌ வாழும் கடவுள்களுக்கு வாழ்த்துகளையும்‌, நன்றியையும் தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

இன்று காலை ராகவா லாரன்ஸுக்கு புத்தாண்டு வாழ்த்‌து கூற தொலைபேசியில் ‌அழைத்திருந்தேன்‌. அப்போது அவர் பேசும்போது, “அண்ணா, நாம் வீட்டிற்கு வாங்‌கி வரும் ‌அத்தியாவசியப் பொருட்களையே 12 மணி நேரம் வெளியில் வைக்கும் ‌இச்சமயத்தில்‌, நம் வீட்டுக் குப்பைகளை முகம் சுளிக்காமல் தினமும் ‌எடுத்துச் செல்லும் தூய்மைப் பணியாளர்களுக்கு அடுத்து உதவி செய்ய விரும்புகிறேன் என்று சொன்னார். தாங்கள் ‌எனக்குக் கொடுக்கவிருக்கும்‌ சம்பளத் தொகையில் ‌25 லட்சம் ரூபாயை தூய்மைப் பணியாளர்களுக்கு, அவர்களின் வங்‌கிக் கணக்கில் நேரடியாகச் சென்றடைய வழி செய்யுமாறும்‌ கூறினார்‌”.

இத்தகைய நல்லுள்ளம் கொண்ட ராகவா லாரன்ஸுடன் இணைந்து பணிபுரிவதில் பெருமை கொள்கிறேன்‌.

ஆகவே, ராகவா லாரன்ஸ் ‌விருப்பப்படி 25 லட்சம் ரூபாயை தூய்மைப் பணியாளர்களின் வங்‌கிக் கணக்கில் செலுத்தவுள்ளோம்‌. எனவே தூய்மைப் பணியாளர்கள் தங்களின் ‌அடையாள அட்டை மற்றும் ‌அடையாள அட்டையில் உள்ள நபரின் வங்கிக் கணக்கு எண் விவரங்களை கீழ்க்கண்ட எண்ணிற்கு வாட்ஸ் ‌அப் மூலம் ‌அனுப்புமாறும்‌, இதற்கு ஊடக மற்றும்‌ பத்திரிகைத் துறை நண்‌பர்கள்‌ உதவுமாறும் கேட்டுக் கொள்கிறோம்‌.

வாட்ஸ்‌ அப்‌ எண்‌: 63824 81658".

இவ்வாறு கதிரேசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x