

எனது சில முயற்சிகள் தவறலாம். ஆனால், முயற்சிக்கத் தவறமாட்டேன் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் பிப்ரவரி 17-ம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதை முன்னிட்டு அவர் நடித்து வரும் 'டாக்டர்' மற்றும் 'அயலான்' ஆகிய படங்களின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. மேலும், சிவகார்த்திகேயனின் பிறந்த நாளுக்கு அவரது திரையுலக நண்பர்கள், திரையுலகினர், ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள்.
சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர் மன்றத்தினர் பலரும் நலத்திட்ட உதவிகள் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் வெளியாயின. இந்த நிகழ்வுகளை எல்லாம் பார்த்து நெகிழ்ந்த சிவகார்த்திகேயன், தனது ட்விட்டர் பதிவில் வீடியோன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் சிவகார்த்திகேயன் கூறியதாவது:
"'டாக்டர்' மற்றும் 'அயலான்' ஆகிய படங்களின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இரண்டு படங்களின் லுக்கிற்குமே நீங்கள் அளித்த பெரிய வரவேற்புக்கு நன்றி. என்னுடைய பிறந்த நாளை நீங்கள் அனைவரும் இணைந்து ரொம்பவே ஸ்பெஷலாக ஆக்கியதற்கு ரொம்ப நன்றி. திரையுலக நண்பர்கள் தொடங்கி பலருமே என் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். அவர்களுக்கும் நன்றி.
என்னுடைய ரசிகர்கள் பலரும் எனது பெயரில் பல நல்ல விஷயங்கள் செய்துள்ளீர்கள். அவை அனைத்தையும் நான் பார்த்தேன். அது உங்களுடைய பெரிய மனது. அதில் கிடைக்கும் புண்ணியம் அனைத்துமே உங்கள் குடும்பத்துக்குத் தான். அந்தப் பெயரை எனக்குக் கொடுத்துவிட்டீர்கள். இப்போது தோன்றுவது ஒரே விஷயம். இவ்வளவு சந்தோஷப்படுத்தியவர்களை எப்படியாவது இன்னும் சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதுதான்.
நிறைய நல்ல சூப்பரான படங்களில் நடித்துச் சந்தோஷப்படுத்த வேண்டும் எனத் தோன்றுகிறது. அதைத் தாண்டி நீங்கள் கொடுக்கும் அன்பு இன்னும் என்னைப் பக்குவப்படுத்துகிறது. நல்லவனாக இருக்க வேண்டும் எனச் சொல்கிறது. எனது சில முயற்சிகள் தவறலாம், ஆனால் முயற்சிக்கத் தவறமாட்டேன். நல்ல முயற்சிகளுடன், நல்ல படங்களுடன், நல்ல மனிதனாக இன்னும் சந்தோஷப்படுத்துவேன்".
இவ்வாறி சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
தவறவிடாதீர்!