

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தமான படம் 'மாநாடு'. முதலில் ஏற்பட்ட சிக்கல்களுக்கு சமீபத்தில் சுமுக முடிவு எட்டப்பட்டது. நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. சிம்புவுடன் நடிக்கவுள்ளவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒப்பந்தம் ஆகியவை நடைபெற்று வந்தன.
தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியது. இதில் பல்வேறு திரையுலகப் பிரமுகர்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். சென்னையில் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு, அடுத்தகட்டமாக ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.
3 ஷெட்டியூல்கள் திட்டமிடப்பட்டு, ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இதில் சிம்புவுக்கு நாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கவுள்ளார். மேலும், பாரதிராஜா, எஸ்.ஏ.சி, கருணாகரன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, மனோஜ், டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் சிம்புவுடன் நடிக்கவுள்ளனர்.
ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன், இசையமைப்பாளராக யுவன், எடிட்டராக ப்ரவீன் கே.எல், கலை இயக்குநராக சேகர் மற்றும் ஆடை வடிவமைப்பாளராக வாசுகி பாஸ்கர் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தில் அப்துல் காலிக் என்ற முஸ்லிம் இளைஞராக சிம்பு நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தவறவிடாதீர்!