

'வலிமை' படப்பிடிப்பில் பைக் சண்டைக் காட்சியின்போது அஜித்துக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'வலிமை'. இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. தற்போது சென்னையில் சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதில் சில பைக் சண்டைக் காட்சிகளும் அடங்கும்.
சண்டைக்காட்சிக்கு முன்பாக அஜித் பைக்கில் வருவது போன்ற காட்சிகளை, சென்னையில் அனுமதி கிடைக்கும் இடங்களில் படக்குழு படமாக்கி வருகிறது. அஜித் நடிக்கும் படம் என்பதால் எங்கு படப்பிடிப்பு நடக்கிறது என்பதை மிகவும் ரகசியமாக வைத்துள்ளது படக்குழு.
இதில் இரு நாட்களுக்கு முன்பு நடந்த பைக் சண்டைக் காட்சியின்போது, பைக் கட்டுப்பாட்டை இழந்ததால் அஜித் கீழே விழுந்தார். அப்போது அவருக்குக் கையில் சிறு காயங்கள் ஏற்பட்டன. ஆனால் அன்றைய தினத்தில் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் முடித்த பிறகே அஜித் சென்றார்.
தற்போது சென்னையில் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காகத் திட்டமிட்டு வருகிறார்கள். அதற்குள் அஜித்துக்குக் காயம் சரியாகிவிடும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறது படக்குழு. இந்தப் படப்பிடிப்பு மிகவும் நீண்ட நாட்களைக் கொண்டதாகத் திட்டமிட்டு வருகிறார்கள்.
இந்தப் படத்தில் அஜித்துக்கு நாயகியாக ஹியூமா குரோஷி நடித்து வருகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். ஜீ ஸ்டுடியோஸ் வழங்க, போனி கபூர் தயாரித்து வருகிறார். காவல்துறை அதிகாரியாக அஜித் நடித்து வரும் இந்தப் படம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.
தவறவிடாதீர்!