

'மூக்குத்தி அம்மன்' படம் அம்மன் படமல்ல என்று அந்தப் படத்தில் நடித்துள்ள ஸ்மிருதி வெங்கட் தெரிவித்துள்ளார்.
'எல்.கே.ஜி' படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி நடித்து, இயக்கியுள்ள படம் 'மூக்குத்தி அம்மன்'. இந்தப் படத்தை அவருடன் என்.ஜே.சரவணனும் இணைந்து இயக்கியுள்ளார். இதில் நயன்தாரா, மெளலி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கன்னியாகுமரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு. வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் எனத் தெரிகிறது.
இந்தப் படத்தில் நடித்துள்ளது குறித்து ஸ்மிருதி வெங்கட், " 'மூக்குத்தி அம்மன்' படக்குழு நான் பணியாற்றிய சிறப்பான குழுக்களில் ஒன்று. நீங்கள் நினைப்பது போன்ற அம்மன் படம் கிடையாது இது. நன்மை தீமைக்கிடையே நடக்கும் போராட்டம் என்பது போலெல்லாம் கிடையாது. இது ஒரு நகைச்சுவையான படம். நயன்தாராவை அம்மன் கதாபாத்திரத்தில் காண மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
நயன்தாரா எல்லாவற்றையும் கச்சிதமாகச் செய்பவர். படப்பிடிப்புக்கு என்றும் தாமதமாக வந்ததில்லை. வேகமாக உடை மாற்றிக் கொண்டு வந்துவிடுவார். கேமராவுக்கு முன் அவர் எங்கு இருக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். அவர் பணியாற்றும் விதத்தில் ஒருவர் குறையே கண்டுபிடிக்க முடியாது. அவரைப் போன்ற நடிகர்களைப் பார்த்து நான் கற்றுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் ஸ்மிருதி வெங்கட்.
தவறவிடாதீர்!