காதலர் தின ஸ்பெஷல்: ரேடியோ சிட்டி பண்பலையில் ‘96’ ஒலிச்சித்திரம்

காதலர் தின ஸ்பெஷல்: ரேடியோ சிட்டி பண்பலையில் ‘96’ ஒலிச்சித்திரம்

Published on

காதலர் தினத்தை முன்னிட்டு, ரேடியோ சிட்டி பண்பலையில் ‘96’ படத்தின் ஒலிச்சித்திரம் ஒலிபரப்பாகவுள்ளது.

சி.பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான படம் ‘96’. பலரின் பள்ளிக்கால காதல் நினைவுகளைக் கிளறிவிட்ட இந்தப் படம், கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி ரிலீஸானது. குறிப்பாக, 90-களில் பள்ளியில் படித்தவர்கள், தங்களை ராம் - ஜானுவாகவே கற்பனை செய்து கொண்டனர்.

விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, த்ரிஷா ஹீரோயினாக நடித்தார். அவர்களின் பள்ளி வயது வேடத்தில் ஆதித்யா பாஸ்கரும், கெளரி கிஷணும் நடித்தனர். இவர்களுடன், தேவதர்ஷினி, ஜனகராஜ், பகவதி பெருமாள், ஆடுகளம் முருகதாஸ், வர்ஷா பொல்லாம்மா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

இந்தப் படத்தின் இசையும் பாடல்களும் கூட மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டன. த்ரிஷாவுக்கு டப்பிங் பேசியதோடு மட்டுமின்றி, அனைத்துப் பாடல்களையும் பாடி சின்மயி வசீகரித்தார். 18 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்தப் படம், 80 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. மேலும், தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

இப்போதும் பள்ளிப் பருவக் காதலைக் கொண்டாடும் குடும்பஸ்தர்களின் படமாக மட்டுமின்றி, அனைத்துத் தரப்புக் காதலர்களின் படமாகவும் '96' இருக்கிறது.

எனவே, காதலர் தினத்தை முன்னிட்டு, ரேடியோ சிட்டி பண்பலையில் நாளை (பிப்ரவரி 14) இரவு 9 மணிக்கு ‘96’ படத்தின் ஒலிச்சித்திரம் ஒலிபரப்பாக இருக்கிறது.

இதை ‘மிஸ்’ பண்ணிடாதீங்க...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in